PUBLISHED ON : நவ 16, 2025

செய்தி: பயன்படுத்த இயலாத அரசுப்பள்ளி கழிப்பறையால் மாணவன் பலி!
அநீதி: அமைச்சரை அனுப்பி அஞ்சலி செலுத்திவிட்டு அமைதி காக்கும் அரசு!
முதல்வரே... கடந்த பிப்ரவரி 17ம் தேதி கடலுார், கீழக்கல் பூண்டி அரசு மேல்நிலைப் பள்ளியில் நீங்கள் திறந்து வைத்த கட்டடத்திற்கு அருகில், பயன்படுத்தவே முடியாத நிலையில் மாணவர்கள் கழிப்பறை இருந்ததை நீங்கள் அறியாதது எப்படி?
'எங்களது 14 வயது மகன் பாலமுருகன் இன்று இல்லாததற்கு உங்களது இந்த அறியாமையே காரணம்' என்கிறேன் நான். நான் மணி. வி.சித்துாரைச் சேர்ந்த விவசாயி. தனியார் பள்ளி மாணவனான என் இளைய மகனை எனது பொருளாதார சூழல் காரணமாக இந்த ஆண்டுதான் சுற்றுச்சுவர் அற்ற இந்த பள்ளியில் 9ம் வகுப்பு சேர்த்தேன்!
சம்பவம் நிகழ்ந்த ஆகஸ்ட் 25, 2025ல், ஆசிரியர் அனுமதியோடு இயற்கை உபாதை கழிக்க பள்ளிக்கு வெளியே சென்றவன் மீண்டும் திரும்பவில்லை. பள்ளிக்கு அருகிலுள்ள கிணற்றில் அவன் சடலமாய் மிதந்ததற்கு என்ன காரணம்; அரசின் நிர்வாக அலட்சியம்!
சம்பவம் நிகழ்ந்த ஒரேவாரத்தில், பயன்படுத்த இயலாத நிலையில் இருந்த மாணவர்கள் கழிப்பறை சீரமைக்கப்படுகிறது; பள்ளிக்கு சுற்றுச்சுவரும் எழுப்பப்படுகிறது! 'உயிர் பலி நிகழ்ந்தால் மட்டுமே செய்யத் தவறிய கடமையைச் செய்வோம்' என்பது என்னவிதமான நிர்வாகம் முதல்வரே?
எங்களின் இழப்புக்கு நீங்கள் தரும் நீதி என்ன?

