PUBLISHED ON : அக் 25, 2026

மெட்ராஸ் மாகாணத்தில், 1870களில் ஆங்கிலேயர்களின் சுரண்டலால் உருவான உணவு பஞ்சத்தால், லட்சக்கணக்கான மக்கள் மடிகின்றனர். ‘பத்ரா மல்லன்னா‘ எனும் நாட்டுப்புற சாமியின் ஆசியால் பிறந்த சிங்கனமாலா பொப்பிலி ரணபலி என்பவன், தன் வீரத்தால் மக்களின் உணவு பஞ்சத்திற்கு முடிவுரை எழுதுகிறான்.
தமிழ் நாட்டுப் புற பாடகரான வி.எம்.மகாலிங்கம் இதில் கதைசொல்லி வேடத்தில் நடித்து இருக்கிறார். நாட்டுப் புற பாடல் களால் ரணபலியின் பெருங்கதையை மக்களுக்கு அவர் கடத்தும்விதமாக அமைந்திருக்கும் திரைக்கதைக்கு, ரத்தம் பாய்ச்சுகிறது அவரது குரல்; அதிலும் ‘கோபாலி...’ பாடலில் நம் சித்தத்தை உலுக்கி விடுகிறார்.
நடிகர்கள் வினோத் சாகர், ஷீலா ராஜ் குமார் மற்றும் ஒளிப்பதிவாளர் நீரவ் ஷா உள்ளிட்ட தமிழ் கலைஞர்களின் பங்களிப்பை இதில் அதீதமாய் ரசிக்க முடிகிறது. ரணபலியின் உக்கிரத்திற்கு ஏற்ற தோரணையில் விஜய் தேவரகொண்டா; இவருக்கு இணையான மனைவி பாத்திரத்தில் ராஷ்மிகா மந்தனா; இருவரும் நடிப்பில் குறை வைக்கவில்லை.
‘ரயில் போக்குவரத்தானது ஆங்கிலேயர்கள் இந்தியாவிற்கு அளித்த கொடை’ என்று வாதிடுவோரின் உச்சந்தலையில் ‘நறுக்’கென்று கொட்டி, ‘மடச்சாம்பிராணிகளா... ரயில் பாதை அமைக்க ரத்தம் சிந்தியதும், வரி செலுத்தியதும் நம்மவர்கள் தானே’ என்று கேட்டிருக்கிறார் இயக்குனர் ராகுல் சாங்கிருத்யன். அஜய் – அதுல் கூட்டணியில் பாடல்களும், பின்னணி இசையும் விருந்து வைக்கின்றன.
‘நாட்டுப்புறவியல், வரலாறு’ என இரண்டையும் இணைத்து சொல்லப்பட்டிருக்கும் கதை சுவாரஸ்யமாக இருந்தாலும், கதைக்குள் அக்காலகட்டத்திற்கான உணர்ச்சிகள் இல்லை. மெட்ராஸ் மாகாணமே உணவு பஞ்சத்தில் சிக்கித்தவிக்கும் சூழலில் அது ரணபலியின் வீட்டில் எதிரொலிக்காதது திரைக்கதையின் பெரிய ஓட்டை!
படைப்புக்கு காரணமான சக கலைஞர்களின் பங்களிப்பிற்கு இணையாக, தன் இயக்கத்தை பட்டை தீட்ட தவறி விட்டார் இயக்குனர்; ஆனாலும், பாதாளம் வரை சறுக்கவில்லை.
@block_B@வெற்றிக்கோட்டை நெருங்கி விழுந்த ரணபலி@@block_B@@
@block_B@மழைக்கு திரையரங்கினுள் ஒதுங்கினாலும் பணம் இழந்த வருத்தம் தர மாட்டான் ரணபலி@@block_B@@
