PUBLISHED ON : அக் 25, 2026

@block_B@அப்பா பாசம்... த்ருஷ்யம் அம்மா பாசம்... ஆஷா@@block_B@@
'அதெப்படி... ஆஷாவின் வீட்டுப் பகுதியில் இருந்து 'நாற்றம்' வந்ததற்கே, அனுமதியின்றி அவ்வீட்டு வளாகத்திற்குள் உரிமையோடு நுழைந்து ஆராயும் பக்கத்து வீட்டுக்காரர், ஆஷாவின் வீட்டு வாசலில் நின்றிருக்கும் ஜோஜு ஜார்ஜின் ஜீப்பை ஒருமுறை கூட கவனிக்காது இருந்திருப்பார்?' - இப்படி, ஆழ்ந்து சிந்திப்பவர்களுக்கான படமல்ல இது!
எந்த உணர்வையும் பகிர்ந்து கொள்ளத் துணையின்றி வாழும் ஒரு தாய், 'தன் இரு மகள்களால் கூட தன் உணர்வுகளை புரிந்து கொள்ள முடியவில்லையே' எனும் துயரத்தையும் தனக்குள்ளே புதைத்து வாழ்கிறார். இத்தகைய மன அழுத்தத்துடன் வாழும் ஆஷாவின் சின்னச்சின்ன ஆசைகளை, மனைவியின்றி வாழும் ஆணுடன் அவர் பகிர்ந்து கொள்ளும் சமையலறை காட்சியின் மூலமும், அதைத் தொடர்ந்து அந்த ஆண் அறியாது அவர் பூக்கும் சிரிப்பின் மூலமும் அழுத்தமாய் உணர்த்துகிறது திரைக்கதை!
ஓர் உயிர் போவதற்கும், ஓர் உயிர் துடிப்பதற்கும் காரணமாகும் ஆஷா, 'நாம் தவறுதலாய் புரிந்துகொண்டு தண்டித்து விட்டோமே' என்று உணர்ந்து தவிப்பதை, தன் வெறித்த பார்வையின் மூலமும், துடிக்கும் உதடுகளின் மூலமும், ஈரம் சொட்டும் கண்களின் மூலமும் நேர்த்தியாய் உணர்த்தி இருக்கிறார் ஊர்வசி!
தன்னால் உயிர் துடிக்கும் ஜோஜு ஜார்ஜ் பாத்திரம் தன்னிடம் இருந்து தப்பிக்க மேற்கொள்ளும் உளவியல் சார்ந்த முயற்சிகளை, எதுவும் அறியாத குழந்தை போல் உள்வாங்கும் நடிப்பில், ஊர்வசிக்கு 'ஆஸ்கர்' கிடைக்க முயற்சி எடுத்திருக்கிறது சாபர் சனலின் இயக்கம்.
'என் பிள்ளைகளின் நல்வாழ்விற்காக, பாதுகாப்பிற்காக, அவர்கள் மேல் நான் கொண்டிருக்கும் பாசத்திற்காக, எந்த எல்லைக்கும் செல்வேன்' என்று ஆஷா செயல்பட்டதாய் நமக்கு சொல்கிறது க்ளைமாக்ஸ்; இந்த இடத்தில் அது வரை உயர்ந்து நின்ற ஊர்வசியை கீழே இழுத்துவிட்டு, அந்த உயரத்திற்கு தாவுகிறது ஜோஜு ஜார்ஜின் பாத்திரம்!
ஒரு சம்பவத்தை தவறாக புரிந்து கொண்டு இரு ஆண்களை ஒரு பெண் தண்டிக்கும் கதையை, 'த்ரில்லர்' ஆக மாற்ற முயன்று இருக்கிறார் இயக்குனர்; 'சிறந்த வெற்றி' இல்லா விடினும் நாம் ரசிக்கும் படி ஜெயித்திருக்கிறது படம்.
@block_B@'விதி வலியது' எனும் தீர்ப்பிற்காக இரு 'மதி' வழக்காடும் படைப்பு@@block_B@@
