/
ஸ்பெஷல்
/
லைப் ஸ்டைல்
/
சுற்றுலா
/
ஹெசருகட்டா - ராஜனகுண்டே கண்ணை கவரும் வன சாலை
/
ஹெசருகட்டா - ராஜனகுண்டே கண்ணை கவரும் வன சாலை
ADDED : ஜன 08, 2026 05:38 AM

- நமது நிருபர் -
பெங்களூரு நகரில் உள்ள ஐ.டி., மற்றும் பன்னாட்டு நிறுவனங்களில் வேலை செய்வோர், தங்கள் மன அழுத்தத்தை குறைக்க, வார இறுதி நாட்களில் குடும்பத்தினருடன் வெளியே சென்று, நேரத்தை செலவிடுகின்றனர். அதிலும் மனதை மகிழ்விக்கும் பச்சை, பசலேன சாலைகளில் பயணம் செய்ய அதிக ஆர்வம் காட்டுகின்றனர்.
இத்தகையவர்களுக்கு ஏற்ற இடமாக, ஹெசருகட்டா - ராஜனகுண்டே வன சாலை உள்ளது. பெங்களூரு நகரவாசிகளுக்கு ஹெசருகட்டா ஏரியை பற்றி அதிகம் தெரிந்து இருக்கும். பரந்து விரிந்து காணப்படும் ஏரிக்கரையில் சைக்கிள் ஓட்டுவது, வாக்கிங் செல்வது என்று நேரத்தை செலவிட்டு இருப்பர். ஏரிக்கரையின் மேல் உள்ள ஸ்ரீதுர்கம்மா கோவிலுக்கும் சென்று இருப்பர்.
ஹெசருகட்டா ஏரியை சுற்றி பார்த்து விட்டு காரில் புறப்படுவோருக்கு, கண்களுக்கு விருந்தளிக்கும் வன சாலையும் உள்ளது. ஹெசருகட்டாவில் இருந்து ராஜனுகுண்டே வரை 12 கி.மீ., துாரத்திற்கு இந்த சாலை செல்கிறது. குறுகலான பாதை வழியாக செல்லும் இந்த சாலையின், இரு பக்கமும் பச்சை, பசலேன காட்சி அளிக்கிறது. குளிர், மழை காலங்களில் இந்த சாலை வழியாக செல்லும் போது, புதிய அனுபவம் கிடைக்கும்.
சில்லென்ற காற்றை சுவாசித்தபடி, வனப்பகுதியை பார்வையிட்டு செல்லலாம். இங்கு பயணிக்கும் போது பண்டிப்பூர் வன சாலையில் செல்வதை போன்ற அனுபவம் கிடைக்கும்.
ஏராளமான வெளிநாட்டு பறவைகள், கிராம வீடுகள், பண்ணை வீடுகளை பார்க்கும் வாய்ப்பு கிடைக்கும். வனப்பகுதி சாலையில் காரை நிறுத்தி, புகைப்படம் எடுத்து மகிழலாம். அதிகாலை, மாலை நேரங்களில் 'சைக்கிளிங்' செய்வோருக்கு இந்த சாலை சொர்க்கமாக உள்ளது.
ராஜனகுண்டே வந்ததும் வலது பக்கம் திரும்பினால், எலஹங்கா வழியாக பெங்களூரு நகருக்குள்ளும், இடது பக்கம் திரும்பினால் தொட்டபல்லாபூர், தேவனஹள்ளி உள்ளிட்ட பகுதிகளுக்கும் சென்று விடலாம்.

