/
ஸ்பெஷல்
/
பானுவாசர ஸ்பெஷல்
/
கோதுமை மாவு பற்றாக்குறையால் உருவான தொழிலதிபர்
/
கோதுமை மாவு பற்றாக்குறையால் உருவான தொழிலதிபர்
ADDED : ஆக 30, 2025 11:10 PM

சில நேரங்களில் நடக்கும் சிறு, சிறு விஷயங்கள், சிலரின் வாழ்க்கையை புரட்டி போட்டுவிடும். அதுபோன்று, கோதுமை மாவு பற்றாக்குறை, சிறிய மளிகைக்கடை உரிமையாளர் வாழ்க்கையை உயர்த்தியது.
பீதர் நகரில் வசிப்பவர் தன்ராஜ், 60. இவர் சிறிதாக மளிகைக்கடை நடத்தி வந்தார். இவர் விற்பனை செய்த பொருட்களில் கோதுமை மாவும் அடங்கும். இவரது கடையில் கோதுமை மாவு அதிகமாக விற்பனையானது. ஆனால் இவருக்கு சப்ளை குறைவாக இருந்தது. ஐந்து கிலோ ஆர்டர் செய்தால், மூன்று கிலோ மட்டுமே கிடைத்தது.
'கோதுமை மாவுக்கு டிமாண்ட் இருப்பதால், நாமே ஏன் கோதுமை மாவு உற்பத்தி செய்யக்கூடாது' என்ற எண்ணம், தன்ராஜுக்கு தோன்றியது. தன் எண்ணத்தை செயல்படுத்தினார். இதற்கு முதலீடு தேவைப்பட்டது. அப்போது கர்நாடக விவசாய உற்பத்தி பதப்படுத்துதல் மற்றும் ஏற்றுமதி கார்ப்பரேஷனின் கடன் திட்டம் பற்றி தெரிந்து, விண்ணப்பித்து கடன் பெற்றார்.
நந்தி பிராண்ட் 'ஸ்ரீயாங்ஷ் ஆக்ரோ புராடெக்ட்ஸ்' என்ற பெயரில் நிறுவனம் அமைத்தார். இதன் மூலம் 'நந்தி' பிராண்ட் பெயரில், கோதுமை மாவு உற்பத்தி செய்து விற்பனை செய்கிறார். மாதந்தோறும் 150 முதல் 180 டன் கோதுமை மாவு விற்பனையாகிறது. ஒரு கிலோ மற்றும் ஐந்து கிலோ பாக்கெட்டுகளில் விற்பனையாகும் இந்த கோதுமை மாவுக்கு, பீதர் அருகில் உள்ள ஆந்திராவின் ஜஹீராபாத், மஹாராஷ்டிராவின் பல்வேறு மாவட்டங்களில் அதிக மவுசு உள்ளது.
இவரது வியாபாரம் லாபகரமாக நடக்கிறது. கடந்த ஆண்டு இரண்டு கோடி ரூபாய் வர்த்தகம் நடந்தது. இரண்டு ஆண்டுகளுக்கு முன், 10 லட்சம் ரூபாய் கடன் பெற்று, தொழிலை துவக்கினார். இதுவரை 40 லட்சம் ரூபாய் முதலீடு செய்துள்ளார். பீதர், ஹும்னாபாத், கலபுரகி, ஜஹீராபாத், மஹாராஷ்டிராவின் உக்கீரில் விநியோகஸ்தர்களை நியமித்து, தொழில் செய்கிறார்.
சிறிய மளிகைக்கடை நடத்திய தன்ராஜ், இன்று கோடிக்கணக்கான ரூபாய் புழங்கும் தொழில் நிறுவனத்தை நடத்துகிறார்.
இதுகுறித்து தன்ராஜ் கூறியதாவது:
கோதுமை மாவு தொழில், லாபகரமாக நடக்கிறது. தற்போது 30 கிலோ கோதுமை மாவு பாக்கெட்டுகளும் கிடைக்கும். அடுத்த ஆண்டு, ஹைதராபாத் - கர்நாடகாவின் அனைத்து மாவட்டங்களிலும் விநியோகஸ்தர்களை நியமிக்க முடிவு செய்துள்ளோம். அதற்கு முன்னதாக, எங்கள் நிறுவனத்தில் உற்பத்தி திறனை அதிகரிக்க தயாராகிறோம். எங்களிடம் ஆன்லைன் மார்க்கெட்டிங் வர்த்தகம் இல்லை.
மத்திய பிரதேசம் நாங்கள் விவசாய குடும்பத்தை சேர்ந்தவர்கள். இப்போதும் விவசா யம் செய்கிறோம். அரிசி, சோளம் உட்பட பல விதமான உணவு தானியங்கள் பயிரிடுகிறோம். ஆனால் கோதுமை பயிரிடுவதில்லை. வெளியே இருந்து வாங்கி, மாவு உற்பத்தி செய்து விற்பனை செய்கிறோம். குறிப்பாக மத்திய பிரதேசத்தில் இருந்து அதிகமாக கோதுமை வாங்குகிறோம்.
வரும் நாட்களில் கடலை மாவு, பல விதமான தானியங்களில் மாவு உற்பத்தி செய்ய உள்ளோம். விநியோகஸ்தர்களை அதிகம் நியமித்தால், நிறைய பேருக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும்.
நான் மளிகைக்கடை நடத்தியபோது, கேட்ட அளவுக்கு எங்களுக்கு கோதுமை மாவு சப்ளை இருந்திருந்தால், தொழில் துவங்கும் ஆலோசனையே, எங்களுக்கு வந்திருக்காது. தொழில் லாபகரமாகும் வரை, மளிகைக்கடையை என் தந்தை பார்த்துக் கொண்டிருந்தார். தினமும் 5,000 ரூபாய் வரை வியாபாரம் நடந்தது. இப்போது அந்த கடையை நிரந்தரமாக மூடிவிட்டு, கோதுமை மாவு தொழிலில் ஈடுபட்டுள்ளோம்.
இந்த தொழிலை விஸ்தரிக்க, திட்டமிட்டுள்ளோம். அதற்கு அதிகமான கடன் தொகை தேவைப்படும்; கிடைக்கும் என, நம்புகிறோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
-நமது நிருபர் -