ADDED : டிச 13, 2025 06:48 AM

தற்போது குளிர் வாட்டுகிறது. இந்த சூழ்நிலையில் ஆரோக்கியமான உணவு சாப்பிடுவது அவசியம். அப்போதுதான் நோயில் இருந்து தற்காத்து கொள்ள முடியும். இதற்கு மிளகு சாதம் பெஸ்ட் சாய்ஸ். மிளகு ஜீரண சக்தியை அதிகரித்து, பசியை துாண்டும். சளி, இருமல் போன்ற பிரச்னைகளுக்கும் நல்லது. இதை செய்வது மிகவும் எளிது.
தேவையான பொருட்கள்
l சாதம் - 1 கப் (உதிரியாக வடித்தது)
l நல்லெண்ணெய் அல்லது நெய் - 2 ஸ்பூன்
l கடுகு - அரை ஸ்பூன்
l உளுத்தம் பருப்பு - 1 ஸ்பூன்
l கடலை பருப்பு - அரை ஸ்பூன்
l முந்திரி பருப்பு - 8 முதல் 10
l கறிவேப்பிலை - ஒரு கொத்து
l பச்சை மிளகாய் - 1
l துருவிய இஞ்சி - 1 ஸ்பூன்
l சீரகம் - அரை ஸ்பூன்
l மிளகு (முழு மிளகு) - ஒன்றரை ஸ்பூன்
l உப்பு - தேவைக்கேற்ப
l பெருங்காயம் - கால் ஸ்பூன்
செய்முறை
அடுப்பை பற்ற வைத்து, வாணலியை வைக்கவும். மிளகு, சீரகத்தை சேர்த்து லேசாக வறுக்கவும். இதை மிக்சியில் போட்டு கொரகொரப்பாக பொடித்து கொள்ளவும். அதே வாணலியில் நல்லெண்ணெய் அல்லது நெய் ஊற்றவும்.
காய்ந்ததும் கடுகு சேர்க்கவும். கடுகு வெடித்ததும், உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு சேர்த்து பொன்னிறமாகும் வரை வறுக்கவும். அதன்பின் முந்திரிப்பருப்பை போட்டு வறுக்கவும்.
இதில் கருவேப்பிலை, பெருங்காயம், பச்சை மிளகாய் நடுவில் கீறி, (குழந்தைகள் காரம் விரும்பாவிட்டால், பச்சை மிளகாய் சேர்ப்பதை தவிர்க்கலாம்) இஞ்சி துருவலும் சேர்த்து வதக்கவும்.
இந்த கலவையில், ஏற்கனவே பொடித்து வைத்துள்ள மிளகு, சீரகம், உப்பு சேர்த் து அடுப்பை மிதமான தீயில் வைத்து வதக்கவும்.
சில நிமிடங்கள் வதங்கிய பின், சாதத்தை சேர்த்து, கிளறவும். மசாலா பொருட்கள் சாதத்தில் சேரும்படி கிளறினால், ஆரோக்கியமான மிளகு சாதம் ரெடி. இதை உருளைக்கிழங்கு வறுவல், ஏதாவது ஒரு காய்கறி கூட்டு அல்லது தயிர் பச்சடியுடன் சாப்பிடலாம்.
பள்ளி செல்லும் குட்டீஸ்களுக்கு, மதிய உணவுக்கு டிபன் பாக்சில் கொடுத்தனுப்பலாம். விரும்பி சாப்பிடுவர். ஆரோக்கியத்துக்கும் உதவியாக இருக்கும். குளிர்காலத்திற்கு ஏற்ற இந்த உணவை, ஒரு முறை செய்து, குடும்பத்தினரை அசத்துங்கள்
- நமது நிருபர் - .

