ADDED : ஆக 30, 2025 03:40 AM

எந்த நேரம் பார்த்தாலும் நான் மட்டும்தான் சமையல் அறையில் நிற்க வேண்டுமா; உங்கள் அனைவருக்கும் சமையல் செய்து கொடுத்தே என் நேரம் சென்று விடுகிறது என்று பெரும்பாலான இல்லத்தரசிகள், தங்கள் வீடுகளில் புலம்புவது வழக்கம்.
இல்லத்தரசிகள் இனி சமையலை நீண்ட நேரம் நின்று செய்ய வேண்டும் என்று இல்லை. சமையலை சீக்கிரம் முடிப்பதற்காக டிப்ஸ் கொடுக்கிறார் லதா ஷெட்டி. அவர் கூறியதாவது:
குடும்பத்தில் உள்ள அனைவரின் பசியை போக்கும் மிகப்பெரிய பொறுப்பு இல்லத்தரசியிடம் உள்ளது. சமைப்பது மட்டும் அவருக்கு வேலையாக இல்லை. துணி துவைப்பது, வீட்டை சுத்தமாக வைத்திருப்பது என, வீட்டிலேயே பல வேலைகள் அவர்களுக்கு உள்ளன. சமையலுக்கு அதிக நேரத்தை செலவிட்டால், மற்ற வீட்டு வேலைகளில் அவர்களால் கவனம் செலுத்த முடியாது.
இதனால் தான் அம்மிஸ் குக்கரில் என்ற யு- டியூப் சேனலை நடத்தி, சமையலை சீக்கிரம் முடிப்பது எப்படி என டிப்ஸ் கொடுத்து வருகிறேன்.
என் சொந்த ஊர் கடலோர பகுதியான தட்சிண கன்னடா என்பதால், துளு மக்களின் வீடுகளில் செய்யும் சைவ, அசைவ உணவுகளையும் எப்படி செய்வது என்று கூறி வருகிறேன்.
வீடுகளில் அவசர அவசரமாக சப்பாத்தி செய்ய மாவு பிசையும்போது, மாவு கடினமாக மாறலாம். இதனால் சப்பாத்தி சரியாக வராமல் இருக்கலாம். இதற்கும் நிறைய டிப்ஸ் உள்ளது. பெண்களின் அழகை பாதுகாப்பதற்கும் டிப்ஸ் கொடுத்து வருகிறேன்.
இவ்வாறு அவர் கூறினார்.
அவர் கொடுத்த டிப்ஸ் சில...
சப்பாத்தி மாவை எவ்வளவு நன்கு பிசைந்தாலும், சப்பாத்தி கட்டையில் வைத்து தேய்க்கும் போது மாவு மென்மையாக வரவில்லை என்றால் கவலை வேண்டாம். சப்பாத்தி மாவுடன் வெதுவெதுப்பான தண்ணீர், சிறிது பால் அல்லது தயிர் சேர்த்து பிசைந்து எண்ணெய் சேர்க்கவும். மாவை உருட்டும் போது அழுத்தி தேய்க்கக் கூடாது.
சமையலுக்கு பூண்டு உரிப்பது பெண்களுக்கு பிடிக்காத ஒன்றாக இருக்கும். இதனால் வெதுவெதுப்பான தண்ணீரில் பூண்டுகளை ஐந்து நிமிடம் ஊற வைத்து உரித்தால், பூண்டின் தோல் எளிதில் பிரிக்கப்படும்.
கோதுமை மாவை வைத்து சப்பாத்தி, பூரி மட்டும்தான் செய்ய முடியும் என்று இல்லை. மசாலா சப்பாத்தி, வெங்காய மசாலா சப்பாத்தி, எட்டு அடுக்கு சப்பாத்தி, மசாலா கோதுமை தோசை, தக்காளி மசாலா கோதுமை தோசை, வெங்காய கோதுமை தோசை ஆகியவையும் செய்யலாம்.
சமையல் செய்து முடித்துவிட்டோம்; பாத்திரமும் கழுவிவிட்டோம். ஆனால் சிங்க்கில் பிடித்துள்ள பாசி, ஸ்க்ரப்பரை வைத்து தேய்த்தும் போகவில்லையே என்ற கவலை வேண்டாம். பேக்கிங் சோடா, எலுமிச்சை பழம் கலந்து தேய்த்தால் ஓரிரு நிமிடங்களில் பாசி போய்விடும்.
பாஸ்மதி அரிசியை தண்ணீரில் அரை மணி நேரம் நன்கு ஊற வைத்து, தக்காளி சாதம் செய்தால், வழக்கமாக செய்யும் தக்காளி சாதத்தை விட சுவை அருமையாக இருக்கும்
- நமது நிருபர் - .