ADDED : ஆக 30, 2025 08:47 AM

வீட்டில் உள்ள குட்டீஸ்கள் சில காய்கறிகளின் பெயரை கேட்டவுடன், வேண்டாம் என கூறிவிட்டு தலைதெறிக்க ஓடுவர். அந்த வரிசையில் முதலிடம் பிடிப்பது பாகற்காய் தான். இதற்கு அடுத்த இடத்தை பிடிக்கும் காய்கறி என்றால் புடலங்காய்.
புடலங்காயில் நார்ச்சத்து, இரும்புச்சத்து, கால்சியம், பாஸ்பரஸ், வைட்டமின் ஏ, பி, சி ஆகியவை நிறைந்துள்ளன. முக்கியமாக நீர்ச்சத்து அதிகமாக உள்ளது. புடலங்காய் சாப்பிடுவது உடலுக்கு மிகவும் நல்லது.
எனவே, குட்டீஸ்களை சாப்பிட வைப்பதற்காக, புடலங்காய் என தெரியாத அளவுக்கு வித்தியாசமான முறையில் செய்து கொடுத்து அவர்களை சாப்பிட வைக்கலாம். அப்படி, புடலங்காயில் வட்ட வடிவில், வறுவல் செய்து அசத்தலாம்.
செய்முறை புடலங்காயின் தோலை சீவி, விதைகளை நீக்கி விட்டு, வட்ட வட்டமாக நறுக்கி எடுத்துக் கொள்ளவும். பின், ஒரு பாத்திரத்தில், கடலை மாவு, பச்சரிசி மாவு, சோள மாவு, மிளகாய் துாள், காஷ்மீர் மிளகாய் துாள், சீரக தூள், சோம்பு துாள், இஞ்சி - பூண்டு விழுது, உப்பு சேர்த்துக் கொள்ளவும்.
இதில், எலுமிச்சைப்பழம் சாற்றை ஊற்றி, அதனுடன் தேவையான அளவு தண்ணீரை ஊற்றி, பஜ்ஜி மாவு பதத்திற்கு மாவை பிசையவும்.
இந்த மாவில் புடலங்காய் துண்டுகளை போட்டு, நன்கு கிளறி எடுக்கவும். பக்கோடா மாவு பதத்திற்கு வைத்துக் கொள்ளவும். பின்னர், வாணலியில் எண்ணெய் ஊற்றி, அது கொதித்த பின், புடலங்காயை போட்டு வறுத்து எடுக்கவும். அவ்வளவு தான் புடலங்காய் வறுவல் தயார்.
இந்த புடலங்காய் வறுவலை, தட்டில் வைத்தவுடன் காலியாகும். அந்த அளவுக்கு அதன் ருசி இருக்கும். இதை மாலை வேளையில் வீட்டில் செய்து அசத்தலாம்.