ADDED : மே 09, 2026 02:12 AM

- நமது நிருபர் -
ஆந்திரா பாணியில் அரிசி உப்புமா செய்வது எப்படி என பார்ப்போம்.
தேவையான பொருட்கள்
இட்லி அரிசி: 2கப்
தேங்காய் துறுவல்: முக்கால் கப்
உலர்ந்த மிளகாய்: 6
புளியம்பழ விழுது: 1 ஸ்பூன்
வெல்லம்: சிறு துண்டு
உப்பு: தேவையான அளவு
தாளிக்க:
தேங்காய் எண்ணெய்: 5 ஸ்பூன்
உளுத்தம் பருப்பு: 1 ஸ்பூன்
கடலைப்பருப்பு: 1 ஸ்பூன்
கறிவேப்பிலை: ஒரு கொத்து
காய்ந்த மிளகாய்: 4
வேர்க்கடலை: கால் கப்
பெருங்காயம்: அரை ஸ்பூன்
செய்முறை
முதலில் அரிசியை நன்றாக கழுவி, மூன்று மணி நேரம் நீரில் ஊற வைக்கவும். அதன் பின், நீரை வடித்து அரிசியை மிக்சியில் போட்டு, அதனுடன் தேங்காய் துறுவல், காய்ந்த மிளகாய், சிறிதளவு தண்ணீர் சேர்த்து, கொரகொரப்பாக அரைக்கவும். பேஸ்ட் போல அரைக்கக் கூடாது; ரவை பதத்தில் அரைக்க வேண்டும்.
அதன் பின், அடுப்பை பற்ற வைத்து, அடி கனமான பாத்திரத்தை வையுங்கள். அதில் தேங்காய் எண்ணெய் ஊற்றவும். எண்ணெய் காய்ந்ததும் உளுத்தம் பருப்பு, கடலைப்பருப்பு, கறிவேப்பிலை, காய்ந்த மிளகாய், வேர்க்கடலை போட்டு பொன்னிறமாக வறுக்கவும்.
பின், ஏற்கனவே தயார் செய்து வைத்துள்ள அரிசி, தேங்காய் துறுவல் கலவையை போட்டு நன்றாக கலக்கவும். சுவைக்கு தேவையான அளவு உப்பு சேர்த்து கிளறி, தட்டு மூடி மிதமான தீயில், 20 நிமிடம் வேக வைக்கவும். உப்புமா அடி பிடித்து விடாமல், நிமிடத்துக்கு ஒரு முறை, கிளறி விட வேண்டும். தேவைப்பட்டால் சிறிதளவு தண்ணீர் தெளிக்கலாம். அரிசி நன்றாக வெந்து, உதிரி, உதிரியானால் உப்புமா தயார்.
இதற்கு, கோங்குரா சட்னி அல்லது தேங்காய் சட்னியுடன் சாப்பிட்டால், சுவையாக இருக்கும். காலை டிபனுக்கு ஏற்றது. உப்புமாவை பிடிக்காதவர்களும், விரும்பி சாப்பிடுவர்!

