ரசிகர்களுடன் எப்போதும் நிற்பதாக ஆர்.சி.பி., அணி நிர்வாகம் உறுதி
ரசிகர்களுடன் எப்போதும் நிற்பதாக ஆர்.சி.பி., அணி நிர்வாகம் உறுதி
ADDED : ஆக 28, 2025 11:15 PM
பெங்களூரு: ரசிகர்களுடன் எப்போதும் நிற்பதாக, ஆர்.சி.பி., அணி நிர்வாகம் உறுதி அளித் து உள்ளது.
ஆர்.சி.பி., எனும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்காக 'எக்ஸ்' வலைதளம் உள்ளது. இந்த வலைதளத்தில் அணியின் செயல்பாடுகள், வீரர்கள், பயிற்சியாளர்களுக்கு பிறந்தநாள் வாழ்த்துகள், அணி தொடர்பான சுவாரசியமான விஷயங்கள் பதிவு செய்யப்படுவது வழக்கம்.
கடந்த ஜூன் 3ம் தேதி ஆர்.சி.பி., அணி முதல் முறையாக ஐ.பி.எல்., கோப்பையை வென்றது. மறுநாள் பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் நடந்த வெற்றி கொண்டாட்டத்தின் போது, மைதானம் வெளியே ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 11 பேர் உயிரிழந்தனர். இதற்கு இரங்கல் தெரிவிக்கும் வகையில், ஆர்.சி.பி., எக்ஸ் பக்கத்தில் ஜூன் 5ம் தேதி இரங்கல் பதிவு வெளியானது. அதற்கு பின் எக்ஸ் பக்கத்தில் எந்த தகவலும் பகிரப்படவில்லை.
இந்நிலையில், 84 நாட்களுக்கு பிறகு, ஆர்.சி.பி., நிர்வாகம் எக்ஸ் பக்கத்தில் ஒரு பதிவை வெளியிட்டு உள்ளது.
நாங்கள் எக்ஸ் பக்கத்தில் தகவல் பதிவிட்டு, கிட்டத்தட்ட மூன்று மாதங்கள் ஆகின்றன. நாங்கள் காணாமல் போகவில்லை. துக்கம், வலியால் எதுவும் பேச முடியவில்லை. வலியை அனுபவிக்கும்போது அதில் இருந்து பல விஷயம் கற்று கொண்டோம். வலியை நம்பிக்கையாக மாற்ற முடிவு செய்து உள்ளோம்.
எங்கள் ரசிகர்களுக்காக, 'ஆர்.சி.பி., கேர்ஸ்' உருவாக்கி உள்ளோம். இன்று நாங்கள் திரும்பி வந்து உள்ளோம். எப்போதும் ரசிகர்களுடன் நிற்போம். நாம் அனைவரும் ஒருங்கிணைந்து, கர்நாடகாவின் பெருமையாக முன்னேறி செல்வோம். நாங்கள் எப்போதும் உங்களுடன் இருக்கிறோம். மேலும் தகவல்களை விரைவில் பகிர்கிறோம்.
இவ்வாறு பதிவில் கூறப்பட்டு உள்ளது.