/
பிற மாநில தமிழர்
/
பிற மாநிலம்
/
ஐதராபாத் ஐக்கிய தமிழ் மன்றத்தின் மூன்றாம் இலக்கிய சங்கமம்
/
ஐதராபாத் ஐக்கிய தமிழ் மன்றத்தின் மூன்றாம் இலக்கிய சங்கமம்
ஐதராபாத் ஐக்கிய தமிழ் மன்றத்தின் மூன்றாம் இலக்கிய சங்கமம்
ஐதராபாத் ஐக்கிய தமிழ் மன்றத்தின் மூன்றாம் இலக்கிய சங்கமம்
ஆக 19, 2025

ஐதராபாத் ஐக்கிய தமிழ் மன்றத்தின் மூன்றாம் இலக்கிய சங்கமம் மற்றும் ஐந்தாம் ஆண்டு தமிழ் வகுப்பு விழா மிகச் சிறப்பாக நடைபெற்றது. விழாவை நேரலையிலும் சுமார் 500 பேருக்கும் மேற்பட்டோர் கண்டு களித்தது குறிப்பிடத்தக்கது.
தமிழ் வகுப்பு குழந்தைகள் மற்றும் ஆசிரியர்களின் தமிழ் தாய் வாழ்த்துடன் துவங்கிய விழாவில் செயற்குழு தலைவர் குமரகுரு வரவேற்புரையாற்ற, ஆசிரியை சங்கீதா நிகழ்ச்சியை மிகச்சிறப்பாக தொகுத்தளித்தார்.
சஹஸ்ராவின் வரவேற்பு நடனம் கண்களுக்கு விருந்தாய் அமைந்தது. அதனை தொடர்ந்து தமிழ் வகுப்பு 5ம் ஆண்டு விழா நடைபெற்றது. தமிழாசிரியைகள் மற்றும் நிர்வாகிகள் ஜெயலட்சுமி மணிகண்டன், செல்லம், ரோஷன் சாபீர், பாரதி பொன்ராஜ், லீலாவதி, நிர்மலா ரவிசங்கர், நாகேஸ்வரி, ராஜேஸ்வரி ரமேஷ் ஆகியோர் கௌரவிக்கப் பட்டனர்.
ஹைதராபாதில் வசிக்கும் தமிழ் மாணவர்கள் கலந்து கொண்ட கலை நிகழ்ச்சிகள் சிறப்பாக நடைபெற்றது. ஹைதராபாத்துக்கு வெளியே உலகமெங்கும் வசிக்கும் மாணவர்கள் தங்கள் தமிழ் வகுப்பு அனுபவத்தை வீடியோ பதிவு செய்து அனுப்ப அது பெரிய திரையில் ஒளிபரப்பப் பட்டது.
தொடர்ந்து அரங்கேறிய பாடல் மற்றும் கவியரங்கத்தில் பாடகர்கள் ராகவன் மற்றும் ஹைதராபாத் யேசுதாஸ் ரவிசங்கரின் மனம் மகிழ வைக்கும் பாடலுடன், அருட்செல்வி மற்றும் மஹேஸ்வரி ஸ்ரீனிவாசனின் கவி மழையும் அரங்கை அளப்பறியா மகிழ்ச்சியில் ஆழ்த்தியது.
அடுத்த நிகழ்வாக ஆண்டு தோறும் தமிழுக்கும், தமிழ் இலக்கியத்துக்கும் சேவைகள் செய்து வரும் சாதனையாளர்களுக்கு ஐக்கிய தமிழ் மன்றம் வழங்கி வரும் பெருமைக்குரிய தமிழ் ஞானச்சுடர் விருது, இந்த ஆண்டு சாரதா கல்சுரல் ட்ரஸ்ட் நிறுவனர் மற்றும் பொதுச் செயலாளர் சாரதா கிருஷ்ணனுக்கு ஐக்கிய தமிழ் மன்ற தலைவர் நிர்மலா ரவிசங்கரால் வழங்கப் பட்டது. ஐக்கிய தமிழ் மன்ற பொதுச் செயலாளர் ஜெயலட்சுமி மணிகண்டன் பொன்னாடை போர்த்தி கௌரவப் படுத்தினார்.
அதனை தொடர்ந்து, நாடகம், திரைப்படம், எழுத்து, ஆன்மிகம் என பல்துறை வித்தகர் நெ.அ. தண்டபாணி எழுதிய ஒட்டுத் திண்ணை நினைவுகள் (நெற்குணம் கிராமத்தின் நெகிழ்ச்சி நினைவுகள்) புத்தக வெளியீட்டு விழா சிறப்பாக நடைபெற்றது. புத்தகத்தை ரவிசங்கர் வெளியிட, தெலுங்கானா திருவள்ளுவர் தமிழ் சங்க தலைவர் ராஜா அங்கமுத்து பெற்றுக் கொண்டு புத்தக விமர்சனமும், வாழ்த்துரையும் வழங்கினார். எழுத்தாளர் நெ.அ. தண்டபாணி ஏற்புரை வழங்கினார். இது நமது ஐக்கிய தமிழ் மன்றத்தால் வெளியிடப் படும் மூன்றாவது புத்தகம் என்பது குறிப்பிடத்தக்கது.
தொடர்ந்து ஐக்கிய தமிழ் மன்ற செயற்குழு உறுப்பினர்கள் உருவாக்கி நடித்த, 90களின் குழந்தைகளும், 2K குழந்தைகளும் ஒரே வகுப்பில் என்ற நகைச்சுவை குறு நாடகம் பார்வையாளர்களை சிரிப்பலையில் ஆழ்த்தி அரங்கை அதிர செய்தது.
விழாவின் இறுதி நிகழ்ச்சியாக அனைவரும் ஆவலுடன் எதிர் பார்த்திருந்த, வாழ்க்கையை உணர்ந்து, அதன் நிதர்சனத்தை தெரிந்து, அனுபவித்து வாழ்பவர்கள் 90 களின் குழந்தைகளே / ஈராயிர குழவிகளே என்ற தலைப்பில் சூடான, சுவையான, விவாத களம் நிகழ்ச்சி துவங்கியது. யுவராஜின் நெறியாள்கையில் இருபுறமும் சுமார் 15 பேச்சாளர்கள் அனல் பறக்க, ஆழமான, அர்த்தமுள்ள அதே சமயம் கலகலப்பான கருத்துகளுடன் விவாதத்தில் ஈடு பட்டனர். சுமார் ஒரு மணி நேரம் நாற்பது நிமிடங்கள் நடைபெற்ற விவாத களம் அரங்கில் பார்வையாளர்களை அங்கிங்கு நகர விடாது கட்டி போட்டதுடன் அவர்களும் அவ்வப்போது கருத்துகளை பகிர்ந்து கொண்டது நிகழ்ச்சியின் வெற்றியை, விறுவிறுப்பை உறுதிப்படுத்தியது.
முன்னதாக நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அனைவருக்கும் தேநீர் வழங்கப் பட்டது. நிர்மலா ரவிசங்கர் நன்றியுரையுடன் அனைவரும் இரவு உணவு அருந்தி கலகலப்பான இலக்கிய நினைவுகளை சுமந்து தங்களது இல்லம் திரும்பினர்.