/
பிற மாநில தமிழர்
/
புதுடில்லி
/
கர்நாடக சங்கீத சபாவின் 89 வருட நிறைவு கலைநிகழ்ச்சிகள்
/
கர்நாடக சங்கீத சபாவின் 89 வருட நிறைவு கலைநிகழ்ச்சிகள்
கர்நாடக சங்கீத சபாவின் 89 வருட நிறைவு கலைநிகழ்ச்சிகள்
கர்நாடக சங்கீத சபாவின் 89 வருட நிறைவு கலைநிகழ்ச்சிகள்
செப் 01, 2025

புதுடில்லி; டில்லி கர்நாடக சங்கீத சபா தனது 89 வருட நிறைவு விழாவையொட்டி கலை நிகழ்ச்சி, விருது வழங்கல் என சிறப்பாக கொண்டாடப்பட்டது.
தொடர் கலை நிகழ்ச்சிகளை 'யுவ நாதோட்சவ் 2025' என்ற தலைப்பில் ஏற்பாடு செய்திருந்தனர். கடந்த ஞாயிறு (ஆக.31) மாலை சபாவும் , சுப சித்தி விநாயகர் ஆலயமும் இணந்து இந்த உற்சவத்தின் முதல் நிகழ்வாக பாராட்டு விழாவும்,செளமியா குரு சரண் அவர்களின் கர்நாடக இசை கச்சேரியும் ஏற்பாடு செய்திருந்தனர். விழாவில் முன்னதாக வெவ்வேறு துறைகளில் தங்களின் சேவைகளை இந்த சமுதாயத்திற்கு அர்ப்பணித்த நல்நெஞ்சங்களை பாராட்டி கவுரவித்தனர்.
டில்லி மலைமந்திர் பிரதான ஆச்சார்யா வைத்யநாத சிவாச்சாரியார் அவர்களுக்கு வேதம் மற்றும் ஆன்மிக பணிகளில் அவரது பங்களிப்பை கெளரவிக்கும் விதமாக
' அத்யாத்ம சேவா விருது வழங்கப்பட்டது.
தலைநகரில் கம்பன் கழகத்தை தொடங்கி அதன்மூலம் கம்பனின் எழுத்தாள்மையை பட்டிமன்றம் சிறப்பு கருத்தரங்கம் என்று நடத்துவதுடன் டில்லி தமிழ் பள்ளி மாணவர்களுக்கு போட்டிகள் வைத்து அடுத்த தலைமுறையையும் கம்பனிடம் இட்டுச்செல்லும் உயர் பணி ஆற்றி வரும் கம்பன் கழக நிறுவனர் கே.வி.கே பெருமாளுக்கு ' கம்பன் சேவா ரத்னா' விருது வழங்கப்பட்டது.
கலை கலாசாரத்தில் நாட்டுப்புற நடனம் கும்மி கோலாட்டம் ஓர் அங்கம்..இதை பொழுது போக்கிற்காக இல்லாமல் வருடம் முழுவதும் பல்வேறு கோவில் மற்றும் பொது விழாக்களில் பங்கேற்று இந்த கலையை மக்களிடம் கொண்டு செல்லும் வானம்பாடி குழுவின் பணி பாராட்டுக்குரியது.அத்துடன் இளய தலைமுறை குழந்தைகளை ஊக்கப்படுத்தி புராண கதைகளை நாடக வடிவில் இவர்கள் கொடுத்து வருகிறார்கள்.இவர்களின் தன்னலமற்ற சேவையை ஊக்குவிக்கும் விதமாக' கலாசார சேவா' விருது இந்த குழுவினருக்கு வழங்கப்பட்டது.
நான்காவதாக வளரும் மிருதங்க கலைஞர் G.சுவாமிநாதனுக்கு யங் அச்சீவர் அவார்ட் வழங்கப்பட்டது. விருதுகளை அன்றைய சிறப்பு விருந்தினர்கள் V..G.பூமா ( Additional member Railway Board) மற்றும் Dr.R . காயத்ரி செனட் மெம்பர் பாரதியார் பல்கலைக்கழகம்,கோவை, திருப்புகழ் அன்பர் ஜிக்கி மாமா ஆகியோர் வழங்கி வாழ்த்தி பேசினர். விருது பெற்றவர்கள் தங்கள் மகிழ்ச்சியையும் நன்றியையும் தெரிவித்தார்கள்.
செளம்யா குரு சரணின் கச்சேரி
இதனை தொடர்ந்து செளம்யா குரு சரணின் கச்சேரி நடைபெற்றது . நாமம் நாராயணனைவிட பெரியது நாமத்திற்கு மகிமை அதிகம்என்ற முன்னுரையுடன் தனது கச்சேரியை தொடங்கினார் . கொடுத்த நேரத்தில் நறுக்கென்று ஐவரின் படைப்புக்களை எடுத்துக் கொண்டு சங்கீதப் பிரியர்களை மனம் குளிரச்செய்தார்
'கஜானன எனஞ்சு சதா பஜனை செய்ய ராதா 'என்று தோடியில் சின்ன கிருஷ்ண தாசரின் வரிகளில் விக்ன விநாயகனை வேண்டிக்கொண்டு
அடுத்து தீட்சிதரின் அகிலாண்டேஸ்வரியை துவஜாவந்தியில் அழகு படுத்தியது சிறப்பு. மாலை நேரத்தில் திருவானைக்காவல் அம்பிகையை ஆராதனை செய்து கண்முன்னே கொண்டு வந்து நிறுத்திவிட்டார்.
தொடர்ந்து எல்லோருக்கும் பரிச்சியமான தியாகராஜரின் பண்டுரீதி கோலு. அந்த எளிமையான கீர்த்தனையில் ராமரை பலவாறு இழைத்து இழைத்து அழைத்த அழகு ஒருபக்கம். 'ராமநாம மனே 'வில் ஸ்வரம் அமைத்துக்கொண்டு விஸ்தாரமாக பாடியது அன்றைய தலைப்புக்கு பொருத்தமாக இருந்தது. உடன் வாசித்த வயலின் மிருதங்கம் கஞ்சிரா பாட்டை உயர்ந்த நிலையில் ரசிக்கவைத்தது. ஞாயிறு ராதா அஷ்டமிக்கு பொருத்தமாக நான்காவது அஷ்டபதி
சுவாமி ஹரிதாஸ் கிரி இசைஅமைத்த ராமப் பிரியா( மனோகரி) ராகத்தில் ஜெய் தேவர் அஷ்டபதியை எடுத்துக்கொண்டார். சாதாரணமாக பஜனை பந்ததியில் அதிகமாக நாம் கேட்ட அஷ்டபதியை கச்சேரியில் கீர்த்தனைகளுக்கு நடுவில் எடுத்து பாட நல்ல திறமையுடன் தன்னம்பிக்கையும் வேண்டும்.அதுவும் சங்கீத ஜாம்பவான்கள் நிறைந்த சபை.செளம்யா மிக நேர்த்தியாக கொண்டு சென்று அழகுபடுத்திய தோடு ரசிக்கவும் வைத்தார்.இறுதியாக முண்டாசு கவிஞன் பாரதியின் நெஞ்சுக்கு நீதியில் நம் நெஞ்சு நிறைந்தது.அன்றைய கச்சேரிக்கு அரவிந்த் நாராயணன் வயலின், அபிஷேக் அவதானி மிருதங்கம், ஸ்ரீ ராம் கஞ்சிரா, கீதா பிஸ்ட் தம்பூராவில் உடன் வாசித்து சிறப்பித்தனர்
கோவில் சார்பில் ரகுராமனும் கர்நாடக சங்கீத சபா சார்பில் சுப்ரமணியன் அவர்களும் நன்றி கூறினர்.விழா நிகழ்வுகளை அனன்யா அழகாக தொகுத்து வழங்கினார்.
--- நமது செய்தியாளர், மீனா வெங்கி.