ADDED : ஆக 14, 2025 03:50 AM
பெர்லின்:அமெரிக்காவின் அலாஸ்காவில் நாளை நடக்கும் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் உடனான சந்திப்பில், ரஷ்யா - உக்ரைன் போர் நிறுத்தத்தை அடைய அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் விரும்புவதாக பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரோன் தெரிவித்தார்.
கிழக்கு ஐரோப்பிய நாடான உக்ரைனுக்கும் ரஷ்யாவுக்கும் இடையே 2022ல் போர் துவங்கியது. இந்த போரை நிறுத்துவது குறித்து பேச ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடினை அமெரிக்காவின் அலாஸ்காவுக்கு அந்நாட்டு அதிபர் டொனால்டு டிரம்ப் அழைத்துள்ளார். இந்த உயர்மட்ட சந்திப்பு நாளை நடக்கிறது.
இந்நிலையில், போர் குறித்து ஐரோப்பிய யூனியனைச் சேர்ந்த நாடுகளின் தலைவர்களுடன் டிரம்ப் நேற்று வீடியோ கான்பிரன்ஸ் மூலமாக ஆலோசித்தார்.
இந்த கூட்டம் குறித்து பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரோன் கூறுகையில், “ரஷ்ய அதிபர் புடினுடன் அலாஸ்காவில் நடைபெறும் உச்சி மாநாட்டில் உக்ரைன்- -- ரஷ்யா இடையே போர் நிறுத்தத்தை அடைய விரும்புவதாக அதிபர் டிரம்ப் மிகவும் தெளிவாக தெரிவித்தார்.
“இதை தொடர்ந்து, டிரம்ப், புடின் மற்றும் உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலென்ஸ்கி ஆகியோரை உள்ளடக்கிய முத்தரப்பு கூட்டம் நடக்க வாய்ப்பு உள்ளது,” என்றார்.