'டிரம்ப் ஒரு ரஷ்ய ஆதரவாளர்': போர்ச்சுக்கல் அதிபர் பகீர்
'டிரம்ப் ஒரு ரஷ்ய ஆதரவாளர்': போர்ச்சுக்கல் அதிபர் பகீர்
ADDED : ஆக 31, 2025 02:03 AM

லிஸ்பன்: “அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் வெளிப்படையாக ரஷ்யாவின் ஆதரவாளராக செயல்படுகிறார்,” என, போர்ச்சுக்கல் அதிபர் மார்செலோ ரெபெலோ டிசோசா குற்றஞ்சாட்டினார்.
கிழக்கு ஐரோப்பிய நாடான உக்ரைன், சர்வதேச ராணுவ அமைப்பான, 'நேட்டோ'வில் இணைய முயற்சித்தது. இது தங்களுக்கு அச்சுறுத்தல் எனக் கூறி, உக்ரைன் மீது 2022ல் ரஷ்யா போர் தொடர்ந்தது. இந்த போரை நிறுத்த அமெரிக்க அதிபர் டிரம்ப் முயற்சித்து வருகிறார்.
இது தொடர்பாக கடந்த 15ல், அமெரிக்காவின் அலாஸ்காவில், ரஷ்ய அதிபர் புடினுடன் அவர் பேச்சு நடத்தினார். தொடர்ந்து, வெள்ளை மாளிகையில் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி, ஐரோப்பிய யூனியன் நாடுகளின் தலைவர்களையும் அதிபர் டிரம்ப் சந்தித்து பேசினார்.
இந்நிலையில், 'நேட்டோ'வில் அங்கம் வகிக்கும் ஐரோப்பிய நாடான போர்ச்சுக்கலின் அதிபர் மார்செலோ ரெபெலோ, பல்கலை நிகழ்ச்சி ஒன்றில் பேசியதாவது:
உலகின் மிகப்பெரிய வல்லரசு நாடான அமெரிக்காவின் அதிபர் டிரம்ப் பாரபட்சமின்றி ரஷ்யாவின் கருவியாக இருக்கிறார். அவர் ரஷ்யாவை வெளிப்படையாக ஆதரிக்கிறார்.
இதனால், பாரம்பரியமாக அமெரிக்காவுடன் கூட்டாளிகளாக இருந்த உக்ரைன் மற்றும் ஐரோப்பிய நாடுகள், தற்போது தங்கள் நலன்களைப் பாதுகாக்க அழுத்தம் தரவேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளன. அதிபர் டிரம்ப் ஒரு தரப்புடன் மட்டுமே பேச்சு நடத்த விரும்புகிறார்.
இவ்வாறு அவர் பேசினார்.