ஹவுதி பயங்கரவாத அமைப்பினருக்கு குறி; ஏமனில் வான்வழி தாக்குதல் நடத்தியது இஸ்ரேல்!
ஹவுதி பயங்கரவாத அமைப்பினருக்கு குறி; ஏமனில் வான்வழி தாக்குதல் நடத்தியது இஸ்ரேல்!
ADDED : ஆக 24, 2025 08:47 PM

ஜெருசலேம்: ஏமனின் ஏவுகணை தளங்கள், ஜனாதிபதி மாளிகை வளாகத்திற்கு அருகிலுள்ள பகுதிகளில் ஹவுதி அமைப்பினரை குறிவைத்து இஸ்ரேல் பாதுகாப்பு படையினர் வான்வழி தாக்குதல் நடத்தி உள்ளனர்.
மேற்காசிய நாடான இஸ்ரேலுக்கும், பாலஸ்தீன பகுதிகளை கட்டுப்பாட்டில் வைத்துள்ள ஹமாஸ் பயங்கரவாத அமைப்புக்கும் இடையே கடந்த 2023ம் ஆண்டு அக்டோபரில் போர் துவங்கியது.இந்தப் போரில், ஹமாஸ் பயங்கரவாத அமைப்புக்கு, அண்டை நாடான ஏமனில் இருந்து செயல்படும் ஹவுதி பயங்கரவாத அமைப்பு ஆதரவு தெரிவித்தது.
காசாவுக்கு ஆதரவாக ஹவுதி பயங்கரவாத அமைப்பினர் இஸ்ரேல் ராணுவத்தினர் மீது தாக்குதல் நடத்தி வருகின்றனர். இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் ஏமனில் அவ்வப்போது ஹவுதி அமைப்பினதை குறிவைத்து இஸ்ரேல் பாதுகாப்பு படையினர் தாக்குதல் நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில் இன்று ஏமனின் ஏவுகணை தளங்கள், ஜனாதிபதி மாளிகை வளாகத்திற்கு அருகிலுள்ள பகுதிகளில் ஹவுதி அமைப்பினரை குறிவைத்து இஸ்ரேல் பாதுகாப்பு படையினர் வான்வழி தாக்குதல் நடத்தி உள்ளனர்.
இஸ்ரேல் நடத்திய தாக்குதல்களைத் தொடர்ந்து பலத்த வெடிச்சத்தங்கள் கேட்டன. இந்தத் தாக்குதல்களை இஸ்ரேல் உறுதிப்படுத்தியது, சனாவில் பல்வேறு இடங்களில் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. மத்திய சனாவில் உள்ள ஒரு நகராட்சி கட்டடத்தை வான்வழித் தாக்குதல் தாக்கியதாகவும், உயிரிழப்புகள் ஏற்பட்டதாகவும் ஹவுதி பாதுகாப்பு வட்டாரம் தகவல் தெரிவித்து உள்ளது.
இது குறித்து, இஸ்ரேல் பாதுகாப்பு படை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: இஸ்ரேல் அரசுக்கும், இஸ்ரேல் மக்களுக்கும் எதிராக ஹவுதிபயங்கரவாத ஆட்சி மீண்டும் மீண்டும் தாக்குதல் நடத்தியதற்கு பதிலளிக்கும் விதமாக இந்த தாக்குதல்கள் நடத்தப்பட்டன. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.