மதுபான கடைகளில் பெண்களும் குடிக்கலாம் இலங்கை அரசு உத்தரவு
மதுபான கடைகளில் பெண்களும் குடிக்கலாம் இலங்கை அரசு உத்தரவு
ADDED : ஜூலை 25, 2025 01:56 AM
கொழும்பு:மதுபான தயாரிப்பு நிறுவனங்களில் பணியாற்ற, மதுபானங்களை வாங்க, விற்க, மதுக்கடைகளில் குடிக்க பெண்களுக்கு இருந்த தடையை இலங்கை அரசு நீக்கியுள்ளது.
நம் அண்டை நாடான இலங்கையில், மதுபான தயாரிப்பு நிறுவனங்களில் பணியாற்ற, சில்லரை விற்பனை கடைகளில் பணியாற்ற, மதுபானங்களை வாங்க மற்றும் விற்க, மதுக்கடைகளில் குடிப்பதற்கு பெண்களுக்கு தடை விதிக்கப்பட்டிருந்தது.
கடந்த, 1979ல் இருந்து இருந்த இந்த தடை, 2018ல் நீக்கப்பட்டது. ஆனால், பலத்த எதிர்ப்பு எழுந்தது.
இதையடுத்து தன்னை கேட்காமல் தடையை நீக்கியுள்ளதாகக் கூறிய அப்போதைய அதிபர் மைத்ரிபால சிறீசேனா, பெண்களுக்கான தடை தொடரும் என்றார்.
இந்நிலையில், பெண்களுக்கான சம உரிமை பறிக்கப்படுவதாக வழக்குகள் தொடரப்பட்டன.
இந்த வழக்குகளை அந்நாட்டின் உச்ச நீதிமன்றம் விசாரித்து வந்தது. தற்போது, பெண்களுக்கு விதிக்கப்பட்டிருந்த தடையை நீக்கி புதிய அரசாணை வெளியிடப்பட்டுள்ளதாக அரசு தரப்பில் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து வழக்கை திரும்பப் பெறுவதாக, மனுதாரர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
புதிய அரசாணையின்படி, மதுபானம் தொடர்பான பணிகளில் ஈடுபட, வாங்க, விற்க மற்றும் மதுக்கடைகளில் குடிப்பதற்கு பெண்களுக்கு உரிமை வழங்கப்பட்டுள்ளது.