விஜய் கட்சி மாநாடு நிறைவு : 6 தீர்மானங்கள் நிறைவேற்றம்
விஜய் கட்சி மாநாடு நிறைவு : 6 தீர்மானங்கள் நிறைவேற்றம்
UPDATED : ஆக 21, 2025 08:28 PM
ADDED : ஆக 21, 2025 03:17 PM
முழு விபரம்

மதுரை: மதுரை பாரபத்தியில் தவெக 2வது மாநில மாநாடு இன்று லட்சக்கணக்கான தொண்டர்கள் முன்னிலையில் நடந்தது. விஜய் 35 நிமிடங்கள் பேசினார்.
தவெகவின் இரண்டாவது மாநில மாநாடு மதுரையில் இன்று நடந்தது. விஜய்யின் பெற்றோர் சந்திரசேகர், ஷோபா ஆகியோரும் கலந்து கொண்டனர். மாலை 3:45 மணியளவில் மேடைக்கு வந்த விஜய்யை நிர்வாகிகள் கை கொடுத்து வரவேற்றனர். மேடையில் இருந்த சந்திரசேகர் விஜய்யை கட்டியணைத்து வரவேற்றனர். பிறகு தொண்டர்களை நோக்கி, விஜய் கையசைத்தும், கும்பிட்டும் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்.
கட்சி நிர்வாகிகள் ஒவ்வொருவராக பேசிய பின் கடைசியில் விஜய் பேசினார். மொத்தம் 35 நிமிடங்கள் பேசிய அவர், திமுக மற்றும் பாஜ பற்றி சரமாரியாக விமர்சனம் செய்தார்.
3500 போலீசார்
2500 பவுன்சர்கள் மாநாட்டு பாதுகாப்பு பணிகளில், 3500 போலீசார் ஈடுபட்டனர். தனியார் பாதுகாப்பு நிறுவனத்தின் மூலம் 2500 பாதுகாவலர்கள் (பவுன்சர்கள்) மாநாட்டு திடலுக்குள் கண்காணிப்பில் இருந்தனர். மாநாட்டு அரங்கிற்குள் ஆம்புலன்ஸ் செல்வதற்கு தனிப்பாதை அமைக்கப்பட்டிருந்தது. பார்வையாளர்கள் அமரும் இருபுறத்திலும் மருத்துவ முகாம்கள் அமைக்கப்பட்டிருந்தினர். டாக்டர்கள், 45 மினி, பெரிய ஆம்புலன்ஸ்கள் தயார் நிலையில் இருந்தன.
நிகழ்ச்சி முடியும் வரை தொண்டர்களுக்கு பிஸ்கெட், அரைலிட்டர் குடிநீர் பாட்டில், மிக்சர், குளுக்கோஸ் டப்பா வழங்கப்பட்டன. மாநாட்டில் பங்கேற்க நேற்று இரவு முதலே தொண்டர்கள் மேடைக்கு வந்து காத்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
மதுரையில் நடந்த மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்
மதுரையில் விஜய் தலைமையில் நடந்த தவெக மாநாட்டில் 6 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
அவை பின்வருமாறு
1.மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து பரந்தூரில் விமான நிலையம் அமைக்கும் திட்டத்தை மத்திய , மாநில அரசுகள் கைவிடவேண்டும். இதற்குப் பதிலாக, விவசாயமும் சுற்றுச்சூழலும் பாதிக்கப்படாத வகையில் மாற்று இடத்தை விமான நிலையத்திற்காகத் தேர்வு செய்யவேண்டும்.
2.வாக்காளர் பட்டியல் சிறப்புத் தீவிர திருத்தப் பணியை தமிழகம் உள்ளிட்ட பிற மாநிலங்களில் மேற்கொள்ளக் கூடாது. ஜனநாயகத்தின் ஆணிவேர் சுதந்திரமான மற்றும் நியாயமான தேர்தல் மட்டுமே. அனைவருக்கும் நம்பிக்கை ஏற்படும் விதமாக, ஜனநாயகத்தைக் காக்கும் வகையில் சுதந்திரமான மற்றும் நியாயமான முறையில் தேர்தல் நடைபெறுவது உறுதி செய்யப்பட வேண்டும்
3. தமிழக மீனவர்கள் கைது செய்யப்படுவதையும் அவர்களின் படகுகள் பறிமுதல் செய்யப்படுவதையும் தடுக்கத் தவறி வரும் மத்திய மாநில அரசுகளுக்கு கண்டனம். கச்சத்தீவை மீட்க வேண்டும் அல்லது 99 ஆண்டுகளுக்குக் குத்தகைக்கு எடுக்க வேண்டும். மேலும், இதுவரை இலங்கை அரசால் கைது செய்யப்பட்டுள்ள மீனவர்களை நிபந்தனையின்றி விடுதலை செய்யவும், பறிமுதல் செய்யப்பட்டுள்ள அவர்களின் படகுகளை இலங்கை அரசுத் திருப்பித் தரவும் தேவையான நடவடிக்கைகளை மத்திய , மாநில அரசுகள் எடுக்க வேண்டும்
4. ஆணவக் கொலைகளைத் தடுக்கத் தனிச் சட்டத்தைத் தமிழக அரசு கொண்டு வர வேண்டும். ஆணவக் கொலைகளைத் தடுக்கும் வகையில் தனிச்சட்டம் இயற்றுவதற்கான அதிகாரம் மாநில அரசுக்கு இருக்கும்போது, அதை இந்தத் தி.மு.க. அரசு உள்நோக்கத்துடன் நிராகரிப்பதை ஏற்றுக்கொள்ள இயலாது. அனைத்துச் சமூகங்களின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு, ஆணவக் கொலைகளைத் தடுக்கத் தனிச் சட்டத்தைத் தமிழக அரசு கொண்டு வர வேண்டும்
5. தமிழகத்தில் பெண்கள், குழந்தைகளுக்குப் பாதுகாப்பற்ற சூழ்நிலை நிலவுவதற்கும், சட்டம் ஒழுங்கு அடியோடு சீர்குலைந்து இருப்பதற்கும் காரணமான நிர்வாகத் திறனற்ற கபட நாடகத் தி.மு.க. அரசுக்குக் கண்டனம்:
6. அவுட்சோர்சிங் முறையில் காலிப் பணியிடங்களை நிரப்பாமல், டிஎன்பிஎஸ்சி உள்ளிட்ட தேர்வு வாரியங்கள் வாயிலாக நேர்மையான முறையில் காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும்.