அமெரிக்கா, சீனாவுக்கு இணையாக அடுத்த வல்லரசாக இந்தியா மாறும்: பின்லாந்து அதிபர் ஸ்டப் நம்பிக்கை
அமெரிக்கா, சீனாவுக்கு இணையாக அடுத்த வல்லரசாக இந்தியா மாறும்: பின்லாந்து அதிபர் ஸ்டப் நம்பிக்கை
ADDED : நவ 05, 2025 12:59 AM

ஹெல்சின்கி: ''உலக அரங்கில் வளர்ந்து வரும் சக்தியாக இந்தியா உள்ளது. அமெரிக்கா, சீனாவுக்கு இணையாக, அடுத்த வல்லரசாக விரைவில் அந்நாடு உருவெடுக்கும்,'' என, பின்லாந்து அதிபர் அலெக்சாண்டர் ஸ்டப் தெரிவித்துள்ளார்.
ஆங்கில செய்தி நிறுவனம் ஒன்றுக்கு, ஐரோப்பிய நாடான பின்லாந்தின் அதிபர் அலெக்சாண்டர் ஸ்டப் நேற்று அளித்த பேட்டி:
உலக அரசியலில் தவிர்க்க முடியாத சக்தியாக இந்தியா உள்ளது. உலகளாவிய நெருக்கடிகளில் முடிவெடுக்கும் இடத்தில் அந்நாடு உள்ளது. நான், இந்தியாவின் மிகப்பெரிய ரசிகன். அமெரிக்கா, சீனாவுக்கு இணையாக, உலகின் அடுத்த வல்லரசு நாடாக விரைவில் அந்நாடு உருவெடுக்கும் என, நம்புகிறேன்.
இந்தியாவின் அனைத்து நடவடிக்கைகளும் உலக அரங்கில் மிகுந்த மரியாதை மற்றும் வரவேற்பை பெறுகின்றன.
ஐ.நா., பாதுகாப்பு கவுன்சிலை விரிவாக்கம் செய்ய வேண்டும். இந்தியா போன்ற நாடுகள் ஐ.நா., பாதுகாப்பு கவுன்சிலில் இடம்பெறாமல் இருப்பது தவறு.
பாதுகாப்பு கவுன்சிலில் லத்தீன் அமெரிக்காவிலிருந்து ஒரு உறுப்பினரும், ஆப்ரிக்காவிலிருந்து இரு உறுப்பினர்களும், ஆசியாவிலிருந்து இரு உறுப்பினர்களும் இடம்பெற வேண்டும். ஐ.நா., பாதுகாப்பு கவுன்சிலில், இந்தியா போன்ற முக்கிய நாடுகள், தங்களுக்கு பிரதிநிதித்துவம் இல்லை என உணர்ந்தால், அந்த அ மைப்புக்கு தான் சிக்கல்.
ரஷ்யா, உக்ரைன் ஆகிய நாடுகளுடன் நல்லுறவு கொண்டிருப்பதால், அந்நாடுகளுக்கு இடையேயான போரை முடிவுக்கு கொண்டு வருவதில் இந்தியா முக்கிய பங்காற்ற முடியும்.
இதில், பெரிய நாடுகள் ஈடுபட வேண்டும். சீன அதிபர் ஷீ ஜின்பிங், இந்திய பிரதமர் மோடி, தென் ஆப்ரிக்க அதிபர் ராமபோசா ஆகியோர் இந்த போரை முடிவுக்கு கொண்டு வர முயற்சி மேற்கொள்ள வேண்டும்.
இவ்வாறு அவர் கூறி னார்.

