பயங்கரவாதத்தை எதிர்த்து போராடுவோம்; ஜெய்சங்கரிடம் இஸ்ரேல் அமைச்சர் உறுதி
பயங்கரவாதத்தை எதிர்த்து போராடுவோம்; ஜெய்சங்கரிடம் இஸ்ரேல் அமைச்சர் உறுதி
UPDATED : நவ 05, 2025 01:13 AM
ADDED : நவ 05, 2025 01:08 AM

புதுடில்லி: அரசுமுறை பயணமாக நம் நாட்டுக்கு வந்துள்ள இஸ்ரேல் வெளியுறவு அமைச்சர் கிடியோன் சர், டில்லியில், நம் வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கரை நேற்று சந்தித்து பேசினார்.
வர்த்தகம், பாதுகாப்பு உள்ளிட்ட துறைகளில் இரு தரப்பு உறவுகளை மேலும் வலுப்படுத்துவது குறித்து விவாதித்த தலைவர்கள், பயங்கரவாதத்தை எதிர்த்து போராடவும் முடிவு செய்தனர்.
மேற்காசிய நாடான இஸ்ரேலின் வெளியுறவு அமைச்சர் கிடியோன் சர், இரு நாட்கள் அரசுமுறை பயணமாக நம் நாட்டுக்கு வந்துள்ளார். தலைநகர் டில்லியில், நம் வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கரை அவர் நேற்று சந்தித்து பேச்சு நடத்தினார்.
வர்த்தகம், உட்கட்டமைப்பு, பாதுகாப்பு உள்ளிட்ட விவகாரங்களில் இருதரப்பு உறவுகளை மேலும் வலுப்படுத்துவது குறித்து விவாதித்த அவர்கள், உலகளவில் பயங்கரவாதத்தை எதிர்த்து போராடவும் முடிவு செய்தனர்.
அடுத்த சில மாதங்களில் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு இந்தியாவுக்கு வரவுள்ளதாக கூறப்படும் நிலையில், அதற்கான முன்னேற்பாடுகள் குறித்தும் இருவரும் விவாதித்தனர்.
தவிர, பிராந்திய இணைப்பை மேம் படுத்தும் நோக்கில், இந்தியா- - மத்திய கிழக்கு - -ஐரோப்பா பொருளாதார வழித்தடத்தை செயல்படுத்து வது குறித்தும் அவர்கள் ஆலோசித்தனர்.
சந்திப்பில், நம் வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் பேசியதாவது:
இந்தியாவும், இஸ்ரேலும் பயங்கரவாத சவாலை எதிர்கொண்டு வருகின்றன. சோதனையான காலங்களில் இரு நாடுகளும் கைகோர்த்து நின்றுள்ளன. அதிக நம்பிக்கையுடன் நல்லுறவை நாம் உருவாக்கி உள்ளோம்.
பயங்கரவாதம் எந்த வடிவில் இருந்தாலும், பூஜ்ய சகிப்புத்தன்மையுடன் அதை எதிர்த்து போராட வேண்டும். காசா சமாதான திட்டத்தை இந்தியா முழுமனதுடன் ஆதரிக்கிறது.
இது, நீடித்த மற்றும் நிரந்தரமான தீர்வுக்கான வழியை அமைக்கும். இஸ்ரேலில், இந்திய தொழிலாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. அவர்களின் தேவைகளை பூர்த்தி செய்ய விரைவில் நட வடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் பேசினார்.
மோடியை இஸ்ரேல் மறக்காது!
காசாவில் ஹமாஸ், லெபனானில் ஹெஸ்புல்லா, ஏமனில் ஹவுதி போன்ற பயங்கரவாதிகளை நாங்கள் எதிர்கொள்கிறோம். ஹமாஸ் பயங்கரவாதிகளை ஆயுதமற்றவர்களாக மாற்ற வேண்டும். காசா ராணுவமயமாக்கப்பட வேண்டும். இதில் சமரசம் செய்ய மாட்டோம். ஹமாஸ் தாக்குதலுக்கு பின், பிரதமர் நெதன்யாகுவை அழைத்த முதல் உலக தலைவர் இந்திய பிரதமர் நரேந்திர மோடி தான் என்பதை இஸ்ரேல் மறக்காது. - கிடியோன் சர் வெளியுறவு அமைச்சர், இஸ்ரேல்

