1971 போருக்கு மன்னிப்பு கேளுங்கள்; பாகிஸ்தானிடம் வங்கதேசம் வலியுறுத்தல்
1971 போருக்கு மன்னிப்பு கேளுங்கள்; பாகிஸ்தானிடம் வங்கதேசம் வலியுறுத்தல்
ADDED : ஆக 25, 2025 06:02 AM

டாக்கா : வங்கதேசம் வந்த பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சர் இஷாக் தரிடம், 1971 போருக்கு மன்னிப்பு கேட்கும் படி வங்கதேச வெளியுறவு ஆலோசகர் தவுஹித் ஹுசைன் வலியுறுத்தினார்.
நட்புறவு நம் அண்டை நாடான வங்கதேசத்தின் பிரதமராக ஷேக் ஹசீனா இருந்தவரை இந்தியாவுடன் அவர் நெருங்கிய நட்புறவை வளர்த்தார். இதனால் பாகிஸ்தான் வங்கதேசத்திடம் இருந்து விலகி இருந்தது.
கடந்த 2012ல் அப்போதைய பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சர் ஹினா ரப்பானி கர் வங்கதேசம் சென்றதே, பாகிஸ்தான் தரப்பிலான கடைசி அதிகாரப்பூர்வ பயணம். அதன் பின் எந்தவித இருதரப்பு பயணமும் நடக்கவில்லை.
இந்நிலையில், கடந்தாண்டு நடந்த மாணவர் போராட்டத்தால் ஷேக் ஹசீனா பதவியை இழந்தார். வங்கதேசத்தில் இருந்து தப்பி இந்தியாவில் தஞ்சமடைந்தார்.
இதையடுத்து வங்கதேச அரசின் இடைக்கால அரசின் தலைமை ஆலோசகராக முகமது யூனுஸ் பதவியேற்றார். அவரது அரசில் இந்தியாவுக்கு எதிரான செயல்பாடுகள் அதிகரித்துள்ளன.
குறிப்பாக அங்கு சிறுபான்மை ஹிந்துக்களுக்கு எதிரான தாக்குதல்கள் அதிகரித்துள்ளன.
இந்நிலையில், உறவை புதுப்பிக்கும் வகையில் பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சர் இஷாக் தார் இரண்டு நாள் பயணமாக நேற்று முன் தினம் வங்கதேசம் சென்றார்.
இருதரப்பு ஒப்பந்தம் வங்கதேச வெளியுறவு ஆலோசகர் தவுஹித் ஹுசைனை நேற்று சந்தித்து பேசினார். இந்த கூட்டத்தில் பல்வேறு இருதரப்பு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின.
இந்த சந்திப்பு குறித்து வெளியுறவு ஆலோசகர் தவுஹித் ஹுசைன் கூறியதாவது: பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சரிடம், 1971 போருக்காக வருத்தம் அல்லது மன்னிப்பை வலியுறுத்தினோம்.
வங்கதேசம் உருவாவதற்கு முன் பாகிஸ்தானுடன் இருந்த பொதுவான சொத்துக்கள் மற்றும் வளங்களைப் பகிர்ந்து கொள்வது தொடர்பான தீர்க்கப்படாத பிரச்னைகள் அவரிடம் எழுப்பப்பட்டன. இரு நாடுகள் இடையேயான உறவை முன்னோக்கி கொண்டு செல்ல, பிரச்னைகள் பேச்சு நடத்தி தீர்க்கப்பட வேண்டும்.
எங்களுக்கிடையேயான வர்த்தகம், 100 கோடி ரூபாய்க்கு கீழ் உள்ளது. இதனால் வர்த்தக உறவை வலுப்படுத்துதல் மற்றும் முதலீட்டை விரிவுபடுத்துதல் குறித்தும் விவாதித்தோம். இவ்வாறு அவர் கூறினார்.