பெரு மற்றொரு முன்னாள் அதிபரும் ஊழல் புகாரில் சிறையிலடைப்பு
பெரு மற்றொரு முன்னாள் அதிபரும் ஊழல் புகாரில் சிறையிலடைப்பு
ADDED : ஆக 14, 2025 11:56 PM

லிமா:ஊழல் குற்றச்சாட்டில், பெரு நாட்டின் முன்னாள் அதிபர் மார்ட்டின் விஸ்காராவுக்கு, ஐந்து மாத சிறை தண்டனை விதிக்கப்பட்டது.
தென் அமெரிக்க நாடான பெருவில், 'பெரு பர்ஸ்ட்' கட்சியைச் சேர்ந்த மார்ட்டின் விஸ்காரா, 62, கடந்த 2018 - 2020ல் அதிபராக பதவி வகித்தார். இவர், 2011 ஜன., - 2014 டிச., வரை மொகுகுவா பிராந்தியத்தின் கவர்னராக பதவி வகித்த போது, லஞ்சம் வாங்கியதாக குற்றஞ்சாட்டப்பட்டது.
இது தொடர்பான வழக்கு விசாரணை பெரு நீதிமன்றத்தில் நடந்து வந்தது. இருதரப்பு வாதங்கள் முடிந்த நிலையில், சமீபத்தில் தீர்ப்பு அளித்த நீதிபதி ஜார்ஜ் சாவேஸ், முன்னாள் அதிபர் மார்ட்டின் விஸ்காராவுக்கு ஐந்து மாத சிறை தண்டனை விதித்தார்.
இதைத் தொடர்ந்து, அவர் சிறையில் அடைக்கப்பட்டார். பெருவில் கைது செய்யப்பட்டு சிறை தண்டனை விதிக்கப்பட்ட ஐந்தாவது முன்னாள் அதிபர் மார்ட்டின் விஸ்காரா ஆவார்.