ADDED : ஆக 24, 2025 12:40 AM
வாஷிங்டன்: இறக்குமதி செய்யப்படும் பர்னிச்சர்கள் மீது வரி விதிப்பது குறித்த அறிவிப்பு அடுத்த 50 நாட்களுக்குள் வெளியிடப்படும்' என அமெரிக்க அதிபர் டொனால் டு டிரம்ப் தன் சமூக வலைதள பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவுடன் வர்த்தகம் மேற்கொண்டு வரும் பல்வேறு நாடுகளுக்கான இறக்குமதி வரிகளை அதிகரித்ததுடன், மாற்றியமைத்தும் வருகிறார் அதிபர் டொனால்டு டிரம்ப். இது பல்வேறு நாட்டு தொழில் துறைகளை கடுமையாக பாதித்துள்ளது.
இந்நிலையில், டிரம்ப் தன் சமூக வலைதள பக்கத்தில் ஒரு பதிவை வெளியிட்டுள்ளார். அதில், பிற நாடுகளில் இருந்து அமெரிக்காவுக்கு இறக்குமதியாகும் பர்னிச்சர்கள் குறித்து தற்போது விசாரணை நடந்து வருவதாகவும், இந்த விசாரணை அடுத்த 50 நாட்களுக்குள் நிறைவடையும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், விசாரணை முடிவில் மற்ற நாடுகளில் இருந்து இறக்குமதியாகும் பர்னிச்சர் பொருட்கள் மீது அதிக வரி விதிக்கப்படும் என அவர் தெரிவித்துள்ளார் .
இதற்கான வரி விகிதங்கள் குறித்து இன்னும் முடிவு செய்யவில்லை என்று குறிப்பிட்டுள்ள அவர், பர்னிச்சர் தொழிற்சாலைகளை வடக்கு மற்றும் தெற்கு கரோலினா, மிச்சிகன் மாகாணங்களில் மீண்டும் கொண்டு வருவதற்காக இந்நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாக தெரிவித்துள்ளார்.
கடந்த ஜூலை வரை பர்னிச்சர்கள் மற்றும் அது தொடர்புடைய பொருட்கள் உற்பத்தி துறையில் அமெரிக்கா 3.40 லட்சத்துக்கும் மேற்பட்டவர்களை பணியமர்த்தியுள்ளது. இது கடந்த 2000ம் ஆண்டில் இருந்ததில், 50 சதவீதம் என கூறப்படுகிறது .
'பர்னிச்சர் டுடே' இதழ் செய்தியின்படி, 2024ல் அமெரிக்காவின் பர்னிச்சர் இறக்குமதி 2.22 லட்சம் கோடி ரூபாயாக இருந்தது. சீனா மற்றும் வியட்னாம் நாடுகள் அமெரிக்காவின் பர்னிச்சர் இறக்குமதியில் முக்கிய இடம் வகிக்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது.