6 வயது இந்திய வம்சாவளி சிறுமி மீது தாக்குதல்: அயர்லாந்தில் சிறுவர்கள் குழு அத்துமீறல்
6 வயது இந்திய வம்சாவளி சிறுமி மீது தாக்குதல்: அயர்லாந்தில் சிறுவர்கள் குழு அத்துமீறல்
ADDED : ஆக 06, 2025 08:57 PM

டப்ளின்:அயர்லாந்தில் இந்திய வம்சாவளியை சேர்ந்த 6 வயது சிறுமி மீது சிறுவர்கள் குழு, இந்தியாவுக்கு திரும்பிச் செல்லுங்கள் என்று கூறி அத்துமீறிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
அயர்லாந்தின் வாட்டர்போர்டில் நேற்று முன்தினம் மாலை இந்திய வம்சாவளியை சேர்ந்த 6 வயது சிறுமி, தனது வீட்டிற்கு வெளியே அவளுடைய நண்பர்களுடன் விளையாடி கொண்டிருந்தாள். அப்போது அங்கு வந்த 12 வயது முதல் 14 வயதுக்குட்பட்ட சிறுவ, சிறுமியர், 6 வயது சிறுமியை பார்த்து, இந்தியாவுக்கு திரும்பி செல்லுங்கள் என்று கூறி, சைக்கிளால் தாக்கி அத்துமீறி இனவெறி தாக்குதல் நடத்தியது.
இந்த சம்பவம் குறித்து சிறுமியின் தாய் இன்று கூறியதாவது:
நான் ஒரு செவிலியர். சமீபத்தில் அயர்லநாந்து குடியுரிமை பெற்று வாட்டர்போர்டில் குடியிருந்து வருகிறேன். எனது 6 வயது மகள் வீட்டின் அருகே விளையாடும் போது, அங்கு வந்த சிறுவர்கள் சிலர், இந்தியாவுக்கு திரும்பிச்செல்லுங்கள் என்று கூறி தாக்கி உள்ளனர். இந்த சம்பவம் நடக்கும்போது,நான் பிறந்து 10 மாதம் ஆன எனது மகனுக்கு உணவளிக்க, எனது மகளிடம் தெரிவித்து சென்றிருந்தேன். சிறுது நேரத்தில் எனது மகள் அழுதுகொண்டே வீட்டிற்குள் திரும்பி வந்தாள்.
அவள் மிகவும் வருத்தப்பட்டாள், அவளால் பேசக்கூட முடியவில்லை, அவள் மிகவும் பயந்தாள்.
என்ன நடந்தது என்று நான் விசாரித்ததில், எனது மகளை விட வயது அதிகமுள்ள சிறுவர்கள் கும்பல் ஒன்று தனது அந்தரங்கப் பகுதிகளில் சைக்கிளால் தாக்கியதாகவும், அவர்களில் ஐந்து பேர் அவரது முகத்தில் குத்தியதாகவும் எனது மகளின் தோழிகள் என்னிடம் தெரிவித்தனர்.
தனது மகள், தற்போது படுக்கையில் அழுது கொண்டே இருக்கிறாள். இப்போது வெளியே விளையாட மிகவும் பயப்படுகிறாள்.எங்கள் சொந்த வீட்டிற்கு முன்னால் கூட நாங்கள் இனி இங்கு பாதுகாப்பாக இருக்கமுடியவில்லை. பயமின்றி அவளால் விளையாட முடியாது. அவளுக்காக நான் மிகவும் வருத்தப்படுகிறேன். அவளைப் பாதுகாக்க முடியவில்லை. இதுபோன்ற ஒரு சம்பவம் நடக்கும் என்று நான் ஒருபோதும் எதிர்பார்க்கவில்லை. எனது மகளை தாக்கிய சிறுவர் கும்பலை பார்க்கும்போது, அவர்கள் என்னை பார்த்து சிரித்தனர். சிறுவர்களின் வயது 12 முதல் 14 வயது இருக்கும். அவர்கள் இங்கேயே சுற்றித் திரிகிறார்கள். இந்த சம்பவம் குறித்து போலீசில் புகார் அளித்துள்ளேன். அந்த புகாரில் சிறுவர்களுக்கு தண்டனை வழங்க கோரிக்கை வைக்கவில்லை. அதற்கு பதிலாக, அவர்களுக்கு நல்ல ஆலோசனை மற்றும் சரியான வழிகாட்டுதலை வழங்க கோரி உள்ளேன். சரியான நடவடிக்கை எடுப்பார்களா என்று தெரியவில்லை.
இவ்வாறு அந்த சிறுமியின் தாய் கூறினார்.
கடந்த இரண்டு வாரங்களில், டப்ளினில் இந்திய வம்சாவளியினர் மீது இதுவரை மூன்று தாக்குதல்கள் நடந்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.