நியாயமற்றது, நேர்மையற்றது: அமெரிக்கா வரி விதிப்பு குறித்து இந்தியா பதில்
நியாயமற்றது, நேர்மையற்றது: அமெரிக்கா வரி விதிப்பு குறித்து இந்தியா பதில்
ADDED : ஆக 06, 2025 09:04 PM

புதுடில்லி: '' இந்தியாவின் பொருட்களுக்கு 50 சதவீதம் வரி விதிக்கும் அமெரிக்காவின் முடிவு என்பது நியாயமற்றது. நேர்மையற்றது,'' என மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் கூறியுள்ளது. இந்தியாவின் நலன்களை பாதுகாக்க அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படும் என தெரிவித்துள்ளது.
ரஷ்யாவிடம் கச்சா எண்ணெய் வாங்குவதால் இந்தியாவுக்கு ஏற்கனவே 25 சதவீத வரி விதிக்கப்பட்ட நிலையில், இன்று கூடுதலாக 25 சதவீத வரி விதிப்பதாக அதிபர் டிரம்ப் அறிவித்துள்ளார்.
இது தொடர்பாக மத்திய வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் ரன்தீர் ஜெயிஸ்வால் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது: பல நாடுகள் தங்களின் தேசிய நலனுக்காக நடவடிக்கை எடுக்கும்போது, இந்தியாவின் நடவடிக்கைக்கு மட்டும் கூடுதல் வரி விதிப்பது என்ற அமெரிக்காவின் மிகவும் துரதிர்ஷ்டவசமானது. இந்த நடவடிக்கை, நேர்மையற்றது. நியாயபடுத்த முடியாது. உரிய காரணம் இல்லாதது. இந்தியா தனது தேசிய நலன்களை பாதுகாக்க தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்ளும்.
சமீப நாட்களாக, ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் இறக்குமதியை அமெரிக்கா குறிவைத்து வருகிறது. இந்த விவகாரத்தில் எங்களின் நிலைப்பாட்டை தெளிவாக கூறிவிட்டோம். நமது இறக்குமதி சந்தை காரணிகளை அடிப்படையாக கொண்டவை. இந்தியாவின் 140 கோடி மக்களின் எரிசக்தி பாதுகாப்பை உறுதி செய்யும் நோக்கம் கொண்டது. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.