'கோட் சூட் போட்ட ஒசாமா பின்லாடன்': பாக் ராணுவ தளபதியை விமர்சித்த அமெரிக்க முன்னாள் அதிகாரி
'கோட் சூட் போட்ட ஒசாமா பின்லாடன்': பாக் ராணுவ தளபதியை விமர்சித்த அமெரிக்க முன்னாள் அதிகாரி
ADDED : ஆக 12, 2025 05:01 PM

வாஷிங்டன்: '' பாகிஸ்தான் ராணுவ தளபதி ஆசிம் முனீர், சூட் போட்ட பயங்கரவாதி ஒசாமா பின்லாடன் போன்றவர், '' என அமெரிக்கா பாதுகாப்பு அமைச்சகத்தின் தலைமை அலுவலகமான பெண்டகனின் முன்னாள் அதிகாரி மைக்கேல் ரூபின் கூறியுள்ளார்.
டிரம்ப்புக்கு நோபல் பரிசு வழங்க வேண்டும் எனக்கூறி அவரை பாகிஸ்தான் ராணுவ தளபதி ஆசிம் முனிர் மகிழ்ச்சி படுத்தினார். இதனையடுத்து அவரை வெள்ளை மாளிகைக்கு வரவழைத்த டிரம்ப் விருந்து கொடுத்து கவுரவித்தார்.
மிரட்டல்
ஆசிம் முனீர் 2வது முறையாக அமெரிக்கா சென்றுள்ளார்.
அங்கு புளோரிடாவில் நிகழ்ச்சி ஒன்றில் ஆசிம் முனீர் பேசியதாவது:சிந்து நதி, இந்தியர்களின் குடும்ப சொத்து அல்ல; பாகிஸ்தானுக்கும் சொந்தமானது. சிந்து நதியின் குறுக்கே இந்தியா அணை கட்டி வருகிறது. அது கட்டி முடிக்கும் வரை காத்திருப்போம். பணிகள் முடிந்ததும், 10 ஏவுகணைகளை வீசி அணையை தகர்த்து விடுவோம். ஏவுகணைகளுக்கு எங்களிடம் பஞ்சம் இல்லை. பாகிஸ்தான் அணு ஆயுத நாடு. எங்களுக்கு எதிராக அச்சுறுத்தல் எழுந்தால், உலகின் பாதி நாடுகளை அழித்துவிடும் வல்லமை எங்களுக்கு இருக்கிறது என்றார்.
ரவுடி நாடு
இந்நிலையில் பெண்டகனின் முன்னாள் அதிகாரியான மைக்கேல் ரூபின் கூறியதாவது: குறைபாடு கொண்ட கண்ணாடி மூலம் பயங்கரவாதத்தை அமெரிக்கர்கள் பார்க்கின்றனர். பல பயங்கரவாதிகளின் அடித்தள சித்தாந்தங்களை அவர்களால் புரிந்து கொள்ள முடியவிலலை. சூட் அணிந்த பின்லாடன் போல் ஆசிம் முனீர் செயல்படுகிறார். பாகிஸ்தான் ரவுடி நாடு போல செயல்படுகிறது. அமெரிக்க மண்ணில் இருந்து பாகிஸ்தான் மிரட்டல் விடுவதை ஏற்றுக் கொள்ள முடியாது. இவ்வாறு அவர் கூறினார்.