வரதட்சணை கொடுமையால் இளம்பெண் தற்கொலை: திருப்பூரில் மீண்டும் அதிர்ச்சி
வரதட்சணை கொடுமையால் இளம்பெண் தற்கொலை: திருப்பூரில் மீண்டும் அதிர்ச்சி
ADDED : ஆக 06, 2025 04:18 PM

திருப்பூர்: திருப்பூரில் வரதட்சணை கொடுமையால், திருமணம் ஆன 10 மாதங்களே ஆன இளம்பெண் ஒருவர் தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து விசாரணை நடக்கிறது.
திருப்பூர் மாவட்டம் பிரண்ட்ஸ் கார்டன் பகுதியைச் சேர்ந்தவர் பிரீத்தி. இவருக்கும் ஈரோடு வீரப்பன்சத்திரம் பகுதியைச் சேர்ந்த சதீஸ்வர் என்பவருக்கும் கடந்த ஆண்டு செப்., 15ம் தேதி திருமணம் நடந்தது. அப்போது வரதட்சணையாக 120 பவுன் நகை, ரூ.25 லட்சம் ரொக்கம், சொகுசு கார் ஆகியவை கொடுக்கப்பட்டதாக தெரிகிறது.
பிரீத்தியின் பூர்விகச் சொத்து விற்பனையில் கிடைத்த ரூ.50 லட்சம் பணத்தை வாங்கி வரும்படி அவரை கணவர் குடும்பத்தினர் வற்புறுத்தியதாக கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த பிரீத்தி, தாயார் வீட்டில் வந்து வசித்து வந்தார். அங்கு மன உளைச்சலில் இருந்த அவர், இன்று தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டார். திருமணம் நடந்து 10 மாதங்களே ஆனதால், ஆர்டிஓ சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை நடக்கிறது.
இதனையடுத்து, சதீஸ்வர் மற்றும் அவரது குடும்பத்தினர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி திருப்பூர் போலீஸ் கமிஷனர் ராஜேந்திரனை, பிரீத்தியின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.
கடந்த சில வாரங்களுக்கு முன்னர் திருப்பூர் மாவட்டம் அவிநாசியை சேர்ந்த ரிதன்யா என்ற இளம்பெண், கணவர் குடும்பத்தினர் வரதட்சணை கொடுமையால் தற்கொலை செய்து கொண்டார். இது தொடர்பாக அவரது கணவர், மாமனார் மற்றும் மாமியாரை போலீசார் கைது செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.