கூடுதல் அவகாசம் கேட்டதால் ஐகோர்ட் அதிரடி; அமலாக்கத்துறைக்கு ரூ.30,000 அபராதம் விதிப்பு!
கூடுதல் அவகாசம் கேட்டதால் ஐகோர்ட் அதிரடி; அமலாக்கத்துறைக்கு ரூ.30,000 அபராதம் விதிப்பு!
ADDED : ஆக 06, 2025 03:58 PM

சென்னை: திரைப்பட தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரன் மற்றும் தொழிலதிபர் விக்ரம் ரவீந்திரன் தாக்கல் செய்த வழக்கில் பதில் மனு தாக்கல் செய்யாத அமலாக்கத்துறைக்கு ரூ.30,000 அபாரதம் விதித்து சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.
டாஸ்மாக் நிறுவனத்தில் ரெய்டு நடத்திய அமலாக்கத்துறை 1,000 கோடி முறைகேடு நடந்திருப்பதாக கூறியது. தொடர்ந்து ஆவணங்களை கைப்பற்றுவது தொடர்பாக சினிமா தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரன் மற்றும் தொழிலதிபர் விக்ரம் ரவீந்திரன் வீடு மற்றும் அலுவலகங்களில் சில மாதங்களுக்கு முன் ரெய்டு நடந்தது.
அவர்கள் வீட்டில் இல்லாததால் வீடுகளுக்கு அதிகாரிகள் சீல் வைத்து சென்றனர். அமலாக்கத்துறை நடவடிக்கையை எதிர்த்து ஆகாஷ் பாஸ்கரன் மற்றும் விக்ரம் ரவீந்திரன் தனித்தனியாகச் சென்னை ஐகோர்ட்டில் மனு செய்தனர்.
நீதிபதிகள் ரமேஷ் மற்றும் லக்ஷ்மி நாராயணன் அமர்வில் விசாரணை நடந்தது. அமலாக்கத்துறை சார்பாக தாக்கல் செய்த ஆவணங்களில் ஆகாஷ் பாஸ்கரன், விக்ரம் ரவீந்திரனுக்கு எதிராக எந்த ஆதாரமும் இல்லை.
அவர்களிடம் இருந்து பறிமுதல் செய்த பொருட்களை ஒப்படைக்க நீதிபதிகள் உத்தரவிட்டனர். இந்த சூழலில் சென்ற 11ம் தேதி அமலாக்கத்துறை சார்பில் மீண்டும் நோட்டீஸ் அனுப்பப்பட்டது. இது தொடர்பாக சென்னை ஐகோர்ட்டில் ஆகாஷ் பாஸ்கரன் தரப்பில் முறையிட்டனர்.வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அமலாக்கத்துறை சார்பாக ஆஜரான வக்கீல் வழக்கில் பதில் மனு தாக்கல் செய்ய கூடுதல் அவகாசம் கேட்டார்.
அதற்கு நீதிபதிகள் ஏற்கனவே 2 முறை அவகாசம் வழங்கிய பின்பும் மேலும் அவகாசம் கேட்பது தவறு என அதிருப்தி தெரிவித்தனர். ஒருங்கிணைந்த பதில் மனுவாக தாக்கல் செய்ய ஒரு முறை மட்டும் வக்கீல் அவகாசம் கேட்டார்.
ஏற்க மறுத்த நீதிபதிகள் அமலாக்கத்துறைக்கு 30 ஆயிரம் அபராதம் விதித்து உத்தரவிட்டனர். அபராத தொகையை ஐகோர்ட் நீதிபதியின் நிவாரண நிதிக்கு செலுத்த உத்தரவிட்டு விசாரணையை அக்டோபர் 20க்கு ஒத்தி வைத்தனர்.