காலி மதுபாட்டில்களை திரும்ப பெறும் திட்டம் கூடுதல் பணியாளர்களை நியமிக்காதது ஏன்? டாஸ்மாக்கிற்கு சென்னை ஐகோர்ட் கேள்வி
காலி மதுபாட்டில்களை திரும்ப பெறும் திட்டம் கூடுதல் பணியாளர்களை நியமிக்காதது ஏன்? டாஸ்மாக்கிற்கு சென்னை ஐகோர்ட் கேள்வி
ADDED : டிச 13, 2025 12:56 AM

சென்னை: 'காலி மதுபாட்டில்களை திரும்பப் பெறும் திட்டத்தை செயல்படுத்த, கூடுதல் பணியாளர்களை நியமிக்காதது ஏன்' என, சென்னை உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பி உள்ளது.
மலைப்பகுதிகளில் உள்ள டாஸ்மாக் கடைகளில், மது பாட்டில்களை கூடுதலாக, 10 ரூபாய்க்கு விற்பனை செய்து, காலி பாட்டில்களை திரும்ப தருவோருக்கு, 10 ரூபாயை திருப்பி தரும் திட்டத்தை அமல்படுத்தும்படி, சுற்றுச்சூழல் மற்றும் வன விலங்குகள் பாதுகாப்பு தொடர்பான வழக்குகளை விசாரித்து வரும், நீதிபதிகள் என்.சதீஷ்குமார், டி.பரத சக்கரவர்த்தி அடங்கிய சிறப்பு அமர்வு உத்தரவிட்டிருந்தது.
இந்த வழக்கு, சிறப்பு அமர்வு முன், நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, டாஸ்மாக் தரப்பில், வழக்கறிஞர் சதீஷ்குமார் ஆஜராகி, ''தமிழகத்தில் காலி மது பாட்டில்களை திரும்பப் பெறும் திட்டம், 21 மாவட்டங்களில் முழுமையாக அமல்படுத்தப்பட்டு உள்ளது.
''ஆறு மாவட்டங்களில், பகுதி அளவுக்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது. டிச., 31ம் தேதிக்குள் மாநிலம் முழுதும், காலி மது பாட்டில்களை திரும்பப் பெறும் திட்டம் அமல்படுத்தப்பட்டு விடும்,'' என்றார்.
அப்போது டாஸ்மாக் ஊழியர்கள் தரப்பில், 'காலி மதுபாட்டில்களை திரும்பப் பெறும் திட்டம் காரணமாக ஊழியர்களுக்கு பணிச்சுமை ஏற்பட்டு உள்ளது. இப்பணிக்கு தனியே ஊழியர்களை நியமிக்க உத்தரவிட வேண்டும்' என, கோரிக்கை விடுக்கப் பட்டது.
இதையடுத்து நீதிபதிகள், 'காலி மது பாட்டில்களை திரும்பப் பெறும் திட்டத்தை செயல்படுத்த, கூடுதல் ஊழியர்களை பணி அமர்த்த, டாஸ்மாக் நிர்வாகம் முன்வராதது ஏன்' என கேள்வி எழுப்பி, ஊழியர்களின் குறைகளை ஆய்வு செய்ய, டாஸ்மாக் நிர்வாக இயக்குநர் தலைமையில் அமைக்கப்பட்ட குழுவின் அறிக்கையை தாக்கல் செய்யும்படி உத்தரவிட்டனர்.

