ADDED : டிச 18, 2024 05:28 PM

கோவை: பட்டீஸ்வரர் கோவில் கும்பாபிஷேகம் அடுத்தாண்டு பிப்., 2லும், மருதமலை கோவில் கும்பாபிஷேகம் ஏப்., 4ம் தேதியும் நடத்த முடிவு செய்யப்பட்டு பணிகள் நடந்து வருகிறது என அமைச்சர் சேகர்பாபு கூறியுள்ளார்.
நிருபர்களை சந்தித்த அமைச்சர் சேகர்பாபு கூறியதாவது: 13 கோயில்களில் கிட்டத்தட்ட 400 கிலோ தங்க நகைகளை உருக்கி அதில் வங்கியில் வைத்ததன் மூலம் கிடைத்த ரூ.5 கோடி வைப்பு நிதியில் மூலம் கோயில் வளர்ச்சி பணிகளுக்கு செலவு செய்துள்ளோம். கும்பாபிஷேகம் நடந்த மாசாணியம்மன் கோயிலில் கிடைத்த 28 கிலோ தங்க நகைகள் வங்கியிடம் ஒப்படைக்கப்பட்டு உள்ளது. ஓரிரு நாளில் மும்பை எடுத்துச் செல்லப்பட்டு மத்திய அரசுக்கு சொந்தமான உருக்காலையில் உருக்கி அந்த வங்கியில் வைப்பு நிதியாக வைக்கப்படும்.
பழநி, சமயபுரம் உள்ளிட்ட 10 கோயில்களில் கிட்டத்தட்ட 700 கிலோ எடையுள்ள தங்க நகைகளை மும்பை உருக்காலைக்கு அனுப்ப உள்ளோம். இந்தாண்டு இறுதிக்குள் இது நிறைவு பெற்றால், அதன் மூலம் கோவில்களுக்கு வைப்பு நிதிமூலம் கிடைக்கும் வருமானம் ரூ.10 கோடியை தாண்டும்.
பட்டீஸ்வரர் கோயில் கும்பாபிஷேகப் பணிகளை பார்வையிட்டோம். ரூ.4.5 கோடி செலவில் நடக்கும் 20 பணிகள் முடிவடைய உள்ளது. பிப்., 10 ல் கும்பாபிஷேகம் நடக்கும்.
மருதமலை கோயிலுக்கு பக்தர்கள் வருகை அதிகரித்து உள்ளது. தி.மு.க., ஆட்சிக்கு வந்த பிறகு இக்கோயிலுக்கு அறங்காவலர்கள் நியமனம் செய்யப்பட்டனர். இங்கு அமையும் தானியங்கி லிப்ட் மார்ச் மாதத்திற்குள் இயக்க நடவடிக்கை எடுத்தோம். ஏப்., 4 ல் கும்பாபிஷேகம் நடத்த முடிவு செய்யப்பட்டு உள்ளது. இவ்வாறு சேகர்பாபு கூறினார்.

