UPDATED : நவ 05, 2025 07:26 AM
ADDED : நவ 05, 2025 07:25 AM

''வாக்காளர் சிறப்பு தீவிர திருத்தம் பல மாநிலங்களில் முறையாக நடக்கவில்லை. எனவே தான் தேர்தல் கமிஷன் மீது சந்தேகம் ஏற்படுகிறது. வாக்காளர் பட்டியல் சீர் திருத்தம் முறையாக நடக்க வேண்டும்,'' என, திருப்புவனத்தில் காங்., - எம்.பி., கார்த்தி தெரிவித்தார்.
திருப்புவனம் அரசு மருத்துவமனையில் 63 லட்சம் ரூபாய் செலவில் அனைத்து வசதிகளுடன் கூடிய பிரேத பரிசோதனை கூடம் கட்டடம் ராஜ்யசபா எம்.பி., ப.சிதம்பரம் தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ் கட்டப்பட உள்ளது. இதற்கான அடிக்கல் நாட்டு விழாவில் கலந்து கொண்ட பின், கார்த்தி எம்.பி., கூறியதாவது:
கோவை மாணவி பாலியல் பலாத்கார சம்பவத்தில் போலீசார் மென்மையாக நடந்து கொள்வது சரியல்ல. இப்படித்தான், அண்ணா பல்கலை மாணவி பாதிக்கப்பட்ட போதும் நடந்து கொண்டனர். இனி அப்படி இருக்கக் கூடாது.
தமிழகம் முழுதும் யாரெல்லாம் ரவுடிகள் என கணக்கெடுக்க வேண்டும். அவர்களை, தொடர்ச்சியாக போலீசார் கண்காணிக்க வேண்டும். தமிழகம் முழுதும் ஒரே நேரத்தில், போலீசார் குற்றவாளிகள் மீது பெரிய அளவில் அதிரடி ஆப்பரேஷன் நடத்த வேண்டும். தமிழகம் முழுதும் கூலிப்படையாக செயல்படுவோர் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது.
வாக்காளர் சிறப்பு தீவிர திருத்தம், பல மாநிலங்களில் முறையாக நடக்கவில்லை. எனவே, தான் தேர்தல் கமிஷன் மீது, அனைவருக்கும் சந்தேகம் ஏற்படுகிறது. வாக்காளர் பட்டியல் சீர் திருத்தம் முறையாக நடக்க வேண்டும் என்பதற்காகத்தான், அவசர கதியில் அதை செய்யக் கூடாது என வலியுறுத்தப்படுகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.

