விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தலில்...மும்முனை போட்டி: அ.தி.மு.க., ஒதுங்கி கொண்டதால் திருப்பம்
விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தலில்...மும்முனை போட்டி: அ.தி.மு.க., ஒதுங்கி கொண்டதால் திருப்பம்
ADDED : ஜூன் 15, 2024 09:05 PM
சென்னை:விக்கிரவாண்டி சட்டசபை தொகுதி இடைத்தேர்தலில், மும்முனை போட்டி உருவாகி உள்ளது. தேர்தலை புறக்கணிப்பதாக அ.தி.மு.க., அறிவித்ததை தொடர்ந்து, இந்த திருப்பம் ஏற்பட்டுள்ளது.
அடுத்த மாதம், 10ம் தேதி நடக்கும் இந்த தொகுதி இடைத்தேர்தலில், தி.மு.க., சார்பில் சிவா, நாம் தமிழர் கட்சி சார்பில் அபிநயா ஆகியோர் வேட்பாளர்களாக நிறுத்தப்பட்டு உள்ளனர்.
தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில், பா.ம.க., போட்டியிடும் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், நேற்று காலை பா.ம.க., சார்பில் சி.அன்புமணி போட்டியிடுவார் என்று கூறப்பட்டுள்ளது.
பிரதான எதிர்க்கட்சியான அ.தி.மு.க., என்ன நிலைப்பாடு எடுக்கப் போகிறது என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்ட நிலையில், சென்னையில் நேற்று மாலை 3:00 மணிக்கு, அ.தி.மு.க., தலைமை அலுவலகத்தில், அக்கட்சியின் பொதுச்செயலர் பழனிசாமி தலைமையில் ஆலோசனை கூட்டம் நடந்தது.
பழனிசாமி விளக்கம்
அதில் பேசியவர்களில் பலர், இடைத்தேர்தலில் போட்டியிடும் முடிவுக்கு ஆதரவாக இருந்துள்ளனர். ஆனால், பழனிசாமியோ, புறக்கணிப்பது தான் சரியாக இருக்கும் என்று கூறியதுடன், அதற்கான காரணங்களையும் நிர்வாகிகளிடம் விளக்கியுள்ளார்.
அதை மற்றவர்களும் ஏற்றதை அடுத்து, இடைத்தேர்தலை புறக்கணிப்பதாக பழனிசாமி அறிவித்தார். அ.தி.மு.க., ஒதுங்கி கொண்ட நிலையில், களத்தில் தி.மு.க., - பா.ம.க., - நாம் தமிழர் கட்சி மத்தியில், மும்முனைப் போட்டி உறுதியாகி உள்ளது.
புறக்கணிப்பு ஏன்?
பழனிசாமி வெளியிட்ட அறிக்கை:
லோக்சபா தேர்தலில், பல்வேறு அராஜகங்களையும், தில்லுமுல்லுகளையும் செய்து பெற்றுள்ள வெற்றி என்பது, மக்களின் ஏகோபித்த எண்ணங்களை முழுமையாக பிரதிபலிக்கும் முடிவு அல்ல.
தி.மு.க.,வினர் வன்முறை மற்றும் அராஜகங்களை நிகழ்த்துவதில் கை தேர்ந்தவர்கள்.
கடந்த காலங்களில் பல்வேறு அராஜகங்களை நிகழ்த்தியதன் காரணமாக, 2009 ஆக., 18ல் நடந்த இளையான்குடி, கம்பம், தொண்டாமுத்துார், பர்கூர், ஸ்ரீவைகுண்டம் சட்டசபை தொகுதிகளுக்கான இடைத்தேர்தலையும், 2009 பிப்., 27ல் நடந்த உள்ளாட்சி அமைப்புகளுக்கான இடைத்தேர்தலையும், ஜெயலலிதா புறக்கணித்தார்.
தி.மு.க., ஆட்சிக்கு வரும் போதெல்லாம், இதுபோன்ற வன்முறை சம்பவங்கள் தொடர் கதையாக நடப்பதற்கு சமீபத்திய உதாரணமாக, 'ஈரோடு கிழக்கு பார்முலா' என்ற ஒன்றை உருவாக்கி, அந்த தொகுதி இடைத்தேர்தலில் அரங்கேற்றினர். ஆடு, மாடுகளை பட்டியில் அடைப்பதை போல், வாக்காளர்களை அடைத்து, ஜனநாயகப் படுகொலையை அரங்கேற்றினர்.
அதனால், விக்கிரவாண்டி இடைத்தேர்தல் ஜனநாயக முறைப்படி, சுதந்திரமாக நடக்குமா என்ற சந்தேகமும், கேள்வியும் எழுந்துள்ளது.
தி.மு.க., அமைச்சர்களும், தி.மு.க.,வினரும் ஆட்சி அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி, பணபலம், படை பலத்துடன் பல்வேறு அராஜகங்கள் மற்றும் வன்முறைகளை கட்டவிழ்த்து விடுவர்.
மக்களை சுதந்திரமாக ஓட்டளிக்க விட மாட்டார்கள். தேர்தல் சுதந்திரமாகவும், நியாயமாகவும் நடக்காது. எனவே, விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தலை அ.தி.மு.க., புறக்கணிக்கிறது.
இவ்வாறு அறிக்கையில் கூறியுள்ளார்.

