உலக நாடுகளுக்கு முன்மாதிரியாக திகழும் அமலாக்க துறை : எப்.ஏ.டி.எப்., பாராட்டு
உலக நாடுகளுக்கு முன்மாதிரியாக திகழும் அமலாக்க துறை : எப்.ஏ.டி.எப்., பாராட்டு
ADDED : நவ 06, 2025 12:04 AM

புதுடில்லி: சட்டவிரோத பணப் பரிமாற்றம் மற்றும் பயங்கரவாதத்துக்கு நிதியுதவி அளிப்பதை தடுக்கும் சர்வதேச கண்காணிப்பு அமைப்பான, எப்.ஏ.டி.எப்., எனப்படும் நிதி நடவடிக்கை பணிக்குழு, நம் நாட்டின் சொத்து மீட்பு நடைமுறையை பாராட்டியதுடன், உலகளவில் முன்மாதிரி அமைப்பாக அமலாக்கத் துறை விளங்குவதாகவும் குறிப்பிட்டுள்ளது.
புதிய அறிக்கை ஐரோப்பிய நாடான பிரான்ஸ் தலைநகர் பாரிசை தலைமையிடமாக வைத்து, எப்.ஏ.டி.எப்., அமைப்பு செயல் படுகிறது.
'சொத்து மீட்பு வழிகாட்டுதல் மற்றும் சிறந்த நடைமுறைகள்' என்ற பெயரில் புதிய அறிக்கையை நேற்று வெளியிட்ட அந்த அமைப்பு, சொத்துக்களை பறிமுதல் செய்வதில், நம் நாட்டின் அமலாக்கத்துறை உலகளவில் முன்மாதிரியாக செயல்படுகிறது என்றும் பாராட்டி உள்ளது.
எப்.ஏ.டி.எப்., அறிக்கையில் கூறப்பட்டு உள்ளதாவது:
பொருளாதார மற்றும் நிதி சார்ந்த குற்றங்களிலிருந்து பெறப்பட்ட சொத்துக்களை மீட்டெடுக்கும் திறன் கொண்ட ஒரு வலுவான கட்டமைப்பை இந்தியா கொண்டுள்ளது.
நன்கு ஒருங்கிணைக்கப்பட்ட மற்றும் தொழில்நுட்பத்தை அடிப்படையாக கொண்ட சொத்து மீட்டெடுப்பு வழிமுறையை அந்நாடு உருவாக்கி உள்ளது.
இது, சட்டப்பூர்வ கருவி களையும், பல நிறுவனங்களுக்கு இடையிலான செயல்பாட்டு ஒத்துழைப்பையும் இணைக்கிறது.
குற்றவாளி மற்றும் குற்றவாளி அல்லாத நபர்களின் சொத்துக்களை முடக்கும் வசதியும் இந்தியாவில் உள்ளது.
இதன் மூலம், விசாரணை முடிவடைவதற்கு முன்னரே சொத்துக்களை பறிமுதல் செய்ய முடியும்.
குற்றச் செயல்களுடன் தொடர்புடையதாக சந்தேகிக்கப்படும் சொத்துக்களை விரைவாக முடக்கவும், பறிமுதல் செய்யவும், இந்தியாவின் சட்டவிரோத பணப்பரிமாற்ற தடுப்புச்சட்டம் உதவுகிறது.
ஒருங்கிணைப்பு இது, எப்.ஏ.டி.எப்., அமைப்பில் உள்ள உறுப்பு நாடுகளிடையே, இந்தியாவின் அமலாக்கத்துறையை முன்மாதிரியாக காட்டுகிறது.
சி.பி.ஐ., - அமலாக்கத்துறை போன்ற மத்திய விசாரணை அமைப்பு களுக்கு இடையேயான ஒருங்கிணைப்பு தான், இந்தியாவின் சொத்து மீட்டெடுப்பு வெற்றிக்கு முக்கிய காரணம்.
இதை, மற்ற நாடுகள் பின்பற்றுவதற்கான தேவை உருவாகி உள்ளது.
இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

