லஞ்சம் வாங்கிய போது கையும் களவுமாக சிக்கியவர்கள்: நேற்றைய பட்டியல்!
லஞ்சம் வாங்கிய போது கையும் களவுமாக சிக்கியவர்கள்: நேற்றைய பட்டியல்!
UPDATED : ஜூலை 11, 2025 11:49 AM
ADDED : ஜூலை 11, 2025 09:30 AM

திருச்சி: திருச்சி அருகே, 10,000 ரூபாய் லஞ்சம் வாங்கிய, மின்வாரிய ஆய்வாளர் போலீசாரால் கைது செய்யப்பட்டார்.
மின்வாரிய ஆய்வாளர் கைது
திருச்சி மாவட்டம், செங்குறிச்சியை சேர்ந்த பிரவீன்குமார் என்ற மின் ஒயரிங் கான்ட்ராக்டர், கோவிந்தராஜ் என்பவருக்கு மேக்குடி என்ற இடத்தில் வீடு கட்ட, தற்காலிக மின்இணைப்பு கேட்டு, மணிகண்டம் மின்வாரிய அலுவலகத்தில் விண்ணப்பித்தார்.
இதுதொடர்பாக, மின்வாரிய அலுவலகத்தில் வணிக ஆய்வாளர் அருளானந்தம், 48, என்பவரை அணுகிய போது, அவர், 10,000 ரூபாய் லஞ்சம் கொடுத்தால் தான், மின் இணைப்பு வழங்கப்படும் என, தெரிவித்துள்ளார்.
தர விரும்பாத பிரவீன்குமார், திருச்சி லஞ்ச ஒழிப்பு டி.எஸ்.பி., மணிகண்டனிடம் புகார் அளித்தார். போலீசார் அறிவுறுத்தல்படி, நேற்று காலை, மணிகண்டம் மின்வாரிய அலுவலகத்தில், பிரவீன்குமார் பணத்தை கொடுத்த போது, அதை வாங்கிய அருளானந்தத்தை, போலீசார் கையும், களவுமாக கைது செய்தனர்.
லஞ்சம் வாங்கிய அதிகாரி கைது
கிருஷ்ணகிரி மாவட்டம், சூளகிரி அடுத்த இனகபீரனபள்ளியை சேர்ந்தவர் கதிரப்பா, 49, விவசாயி. இவருக்கு சொந்தமாக ஒரு ஏக்கர் விவசாய நிலம் உள்ளது. கடந்த மாதம் அவரது விவசாய நிலத்தில் கோழி பண்ணை அமைத்து, தொழில் தொடங்க முடிவு செய்தார்.
இதனால் நிலத்தின் நடுவே உள்ள மின் கம்பத்தை அகற்றி, இடமாற்றம் செய்ய ஆன்லைனில், 2,145 ரூபாய் அரசுக்கு செலுத்தி, தமிழ்நாடு மின் பகிர்மான கழக, அத்தி முகம் உதவி பொறியாளர் அலுவலகத்திற்கு விண்ணப்பித்தார். ஆனால், மின்கம்பத்தை மாற்றிஅமைக்க, 15,000 ரூபாய் லஞ்சமாக அத்திமுகம் மின்வாரிய உதவி பொறியாளர் உதயகுமார் கேட்டுள்ளார்.
லஞ்சம் கொடுக்க விரும்பாத விவசாயி கதிரப்பா, இது குறித்து, கிருஷ்ணகிரி மாவட்ட லஞ்ச ஒழிப்பு போலீசில் தெரிவித்தார். இன்ஸ்பெக்டர் ரவி ஆலோசனை படி, ரசாயனம் தடவிய, 15,000 ரூபாயை, உதவி பொறியாளர் உதயகுமாரிடம் நேற்று மாலை கதிரப்பா கொடுத்தார்.
அதை அவர் பெற்றபோது, அங்கு மறைந்திருந்த கிருஷ்ணகிரி லஞ்ச ஒழிப்பு டி.எஸ்.பி., நாகராஜன் தலைமையில், இன்ஸ்பெக்டர் ரவி, எஸ்.ஐ., மஞ்சு நாதன் மற்றும் போலீசார், உதயகுமாரை கைது செய்தனர்.
2 சார் பதிவாளர்கள் மீது வழக்கு
விழுப்புரம் மாவட்டத்தை சேர்ந்தவர் அசோக்; வழக்கறிஞர். இவர் தனது தாயின் பெயரில் உள்ள சொத்தை மாற்றம் செய்ய புதுச்சேரி சாரம் பத்திரப் பதிவு அலுவலகத்திற்கு கடந்தாண்டு சென்றார். அங்கு பணியில் இருந்த சார் பதிவாளர் ஸ்ரீகாந்த், பத்திரம் பதிவு செய்ய ரூ.50 ஆயிரம் லஞ்சம் கேட்டுள்ளார். அதற்கு அசோக் லஞ்சம் எதற்கு கொடுக்க வேண்டும் என, கேட்டுள்ளார்.
அதற்கு ஸ்ரீகாந்த் பத்திரம் பிரெஞ்ச் மொழியில் இருப்பதால், அதனை மொழிபெயர்ப்பு செய்து அதன் பிறகு தான் மாற்ற முடியும் என, கூறி ரூ. 20 ஆயிரம் லஞ்சம் கேட்டுள்ளார். இதனையடுத்து அசோக் பணம் எடுத்து வந்தபோது, ஸ்ரீகாந்த் அவரை அலுவலக கழிவறைக்கு அழைத்து சென்று, 20 ஆயிரத்தை வாங்கியுள்ளார். இதனை வீடியோவாக பதிவு செய்த அசோக் கடந்த சில நாட்களுக்கு முன், சமூக வலை தளங்களில் வெளியிட்டார்.
இது குறித்து விசாரணை நடத்திய பத்திரப்பதிவுத் துறை ஆணையரான கலெக்டர் குலோத்துங்கன், லஞ்சம் வாங்கிய சார் பதிவாளர் ஸ்ரீகாந்தை, சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டார். இது குறித்து தலைமை செயலர் விசாரணை நடத்த உத்தரவிட்டார்.
அதன்படி, மாவட்ட பதிவாளர் லஞ்ச ஒழிப்பு போலீசில் ஸ்ரீகாந்த் மற்றும் அவருக்கு ஆதரவாக செயல்பட்ட மற்றொரு சார் பதிவாளர் பாஸ்கரன் ஆகியோர் மீது புகார் அளித்துள்ளார். அதன் அடிப்படையில் லஞ்ச ஒழிப்புத்துறை ஆய்வாளர் வெங்கடாசலபதி வழக்குப் பதிந்து விசாரித்து வருகிறார்.