இயந்திரத்தனமாக செயல்படும் லஞ்ச ஒழிப்புத்துறை; ஐகோர்ட் குட்டு
இயந்திரத்தனமாக செயல்படும் லஞ்ச ஒழிப்புத்துறை; ஐகோர்ட் குட்டு
UPDATED : ஜூலை 11, 2025 03:03 PM
ADDED : ஜூலை 11, 2025 08:39 AM

மதுரை: லஞ்ச ஒழிப்புத்துறையை வலுப்படுத்த தமிழக அரசுக்கு உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டது.
மதுரை மாவட்டம் பேரையூர் அருகே அதிகாரிபட்டி மலர் செல்வி தாக்கல் செய்த மனு: எனது கணவர் 2022ல் இறந்தார். திருப்பூரில் வேலை செய்தேன். போலி பட்டாக்களை உருவாக்கி மோசடி பத்திரங்கள் மூலம் எங்களின் சில பூர்வீகச் சொத்துக்கள் விற்கப்பட்டுள்ளது. இதை ரத்து செய்ய சட்டப்பூர்வ வாரிசு சான்று கோரி சம்பந்தப்பட்ட அதிகாரிகளை அணுகினேன்.
பேரையூர் தாசில்தார், எழுமலை சார்பதிவாளர், அதிகாரிபட்டி வருவாய் ஆய்வாளருக்கு வழங்க வேண்டும் எனக்கூறி அதிகாரிபட்டி வி.ஏ.ஓ., லஞ்சம் கேட்டார். அவரிடம் ரூ.1 லட்சத்து 85 ஆயிரத்தை பல்வேறு தேதிகளில் வழங்கினேன். அவரது மனைவியின் வங்கி கணக்கிற்கு 'ஜி- பே' மூலம் ரூ.45 ஆயிரம் செலுத்தினோம்.
மேலும் பணம் கேட்டதால் லஞ்ச ஒழிப்புத்துறை தென்மண்டல எஸ்.பி., - மதுரை டி.எஸ்.பி.,யிடம் புகார் அளித்தேன். நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு குறிப்பிட்டார். ஏற்கனவே விசாரித்த நீதிபதி பி.புகழேந்தி பிறப்பித்த இடைக்கால உத்தரவு: ஜி-பே மூலம் பணம் செலுத்தியது, தனக்கும் வி.ஏ.ஓ.,விற்கும் நடந்த 'வாட்ஸ் ஆப் ஆடியோ' உரையாடல் விபரங்களை புகாரில் மனுதாரர் அளித்துள்ளார். புகாருடன் தங்களுக்கு எந்த ஆவணமும் வரவில்லை என லஞ்ச ஒழிப்புத்துறை மறுத்துள்ளது.
புகாரின் உண்மைத் தன்மையை அறிய ஏதேனும் ஆவணங்கள் தேவைப்பட்டால், மனுதாரரிடமிருந்து லஞ்ச ஒழிப்புத்துறை சேகரித்திருக்க வேண்டும். மாறாக கலெக்டருக்கு புகாரை பரிந்துரைத்ததால், 8 மாதங்களாக சரியாக விசாரிக்கவில்லை. இந்நீதிமன்றம் 2024 அக்.21 ல் உத்தரவிட்டதன் மூலம் விசாரணை நடத்த பேரையூர் தாசில்தாருக்கு கலெக்டர் உத்தரவிட்டார். தாசில்தார் விசாரணையில் வி.ஏ.ஓ.,விற்கு எதிரான குற்றச்சாட்டிற்கு முகாந்திரம் இருப்பதாகக்கூறி நடவடிக்கை எடுக்கப்பட்டது.
ஊழல் புகார்களை கையாள லஞ்ச ஒழிப்புத்துறைக்கு போதிய வசதி இல்லை. அதில் குறைந்தளவு அலுவலர்கள் உள்ளனர். வரும் புகார்களை, அவற்றின் தன்மையைக்கூட பார்க்காமல், சம்பந்தப்பட்ட துறைகளுக்கு அனுப்பி வைப்பதன் மூலம், லஞ்ச ஒழிப்புத்துறை தபால் அலுவலகமாக செயல்பட முடியாது.
மாநில அரசுத்துறைகளில் உள்ள ஊழியர்களின் தற்போதைய எண்ணிக்கை, லஞ்ச ஒழிப்புத்துறையிலுள்ள அலுவலர்களின் எண்ணிக்கை, கடந்த 5 ஆண்டுகளில் லஞ்ச ஒழிப்புத்துறைக்கு வந்த புகார்களின் எண்ணிக்கை, நிலுவையிலுள்ள புகார்கள் விபரங்களை லஞ்ச ஒழிப்புத்துறை இயக்குனர் அறிக்கையாக தாக்கல் செய்ய வேண்டும். இவ்வாறு உத்தரவிட்டார்.
மீண்டும் பி.புகழேந்தி விசாரித்தார். மனுதாரர் தரப்பு வழக்கறிஞர் வாஞ்சிநாதன் ஆஜரானார்.நீதிபதி பிறப்பித்த இறுதி உத்தரவு: 5 ஆண்டுகளில் வந்த புகார்கள், நடவடிக்கை மேற்கொண்டவை, துறையிலுள்ள பணியாளர் எண்ணிக்கை குறித்து லஞ்ச ஒழிப்புத்துறை பதில் மனு தாக்கல் செய்துள்ளது.
மனுதாரரின் புகாரில் போதிய விவரங்கள், ஆவணங்கள் இல்லை. புகாரை பரிசீலித்து நடவடிக்கை எடுக்க கலெக்டருக்கு அனுப்பியதாக லஞ்ச ஒழிப்புத்துறை பதிலளித்துள்ளது. இருப்பினும், 'ஜி-பே' மூலம் பணம் செலுத்தியதை கருத்தில் கொண்டு, மனுதாரரிடம் விபரங்களை லஞ்ச ஒழிப்புத்துறை பெற்றிருக்க வேண்டும். புகாரை இயந்திரத்தனமாக கலெக்டருக்கு அனுப்பி, விசாரணை கைவிடப்பட்டுள்ளது.
ஒரு பொது ஊழியர் சட்டவிரோதமாக லஞ்சம் பெறுவது குற்றம். லஞ்ச ஒழிப்புத் துறையின் விளக்கம் மேலோட்டமானது; இயந்திரத்தனமானது. பட்டா சந்தேகத்திற்குரிய வகையில் விரைவாக மாற்றப்பட்டுள்ளது. வி.ஏ.ஓ.,மீது நடவடிக்கையை துவங்கினாலும் பட்டா மாறுதலில் ஒப்புதல்கள் மற்றும் அடுத்தடுத்த பரிவர்த்தனைகளை விரிவான ஆய்விற்கு உட்படுத்த வேண்டும். வி.ஏ.ஓ.,வை மட்டும் பலிகடா ஆக்கக்கூடாது. பட்டா மாறுதலில் முழு சங்கிலி தொடர் நடவடிக்கை மற்றும் அதில் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் பற்றி மறு ஆய்வு செய்ய வேண்டும்.
ஊழலை தடுப்பதில் லஞ்ச ஒழிப்புத்துறை செயல்பாடு முக்கியமானது. அதற்கு அனுமதிக்கப்பட்ட அலுவலர்களின் எண்ணிக்கை 611 ஆக இருந்தாலும், தற்போது 541 பேர் மட்டுமே பணிபுரிகின்றனர். இத்துறை மாநிலம் முழுவதும் 16.93 லட்சத்திற்கும் மேற்பட்ட அரசு ஊழியர்களை கண்காணிக்கிறது. ஆண்டுதோறும் 15 ஆயிரம் புகார்கள் பெறப்படுகின்றன. தற்போதைய அலுவலர்கள் எண்ணிக்கை, உள்கட்டமைப்பு வசதி ஊழலை கட்டுப்படுத்த போதுமானதாக இல்லை.
லஞ்ச ஒழிப்புத்துறையை வலுப்படுத்தி, அலுவலர்களின் எண்ணிக்கையை அதிகரித்து, சுதந்திரமாகச் செயல்படுவதை உறுதி செய்ய அரசு அவசர நடவடிக்கைகளை எடுக்க வேண்டியது அவசியம். மனுதாரரின் புகாரில் முகாந்திரம் இருக்கும்பட்சத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை எஸ்.பி., வழக்கு பதிய வேண்டும். புகாரில் குறிப்பிட்டுள்ள பட்டாக்கள் மற்றும் தொடர்புடைய பரிவர்த்தனைகள் குறித்து முந்தைய விசாரணையுடன் தொடர்பில்லாத ஒரு அதிகாரியால் மறு ஆய்வு செய்யப்படுவதை கலெக்டர் உறுதி செய்ய வேண்டும்.
தவறு செய்த அனைத்து அதிகாரிகள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும். விசாரணைக்கு மனுதாரர் ஒத்துழைக்க வேண்டும். கூடுதல் ஆதாரங்களை வழங்க வேண்டும். இவ்வாறு உத்தரவிட்டார்.