ADDED : பிப் 26, 2024 01:01 AM

என்.ஏ.நாக சுந்தரம், குஞ்சன்விளை, குமரி மாவட்டத்தில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: நாட்டு நடப்புகளையும், உண்மை நிலவரங்களையும் அறிந்தோருடன் நட்பு கொண்டு, அறிவை வளர்த்துக் கொண்டால், தி.மு.க., - எம்.பி., கனிமொழி, பிரதமர் மோடியிடம் 15 லட்சம் ரூபாயை கேட்டிருக்க மாட்டார்,
ஒரு எம்.பி., எந்த விஷயத்தையும் ஆழமாக அறிந்து கொள்ளாமல் பேசுவது, அவருக்கு போதுமான அறிவு இல்லை என்பதையே காட்டுகிறது.
பிரதமர் மோடி, 'வெளிநாடுகளில் பதுங்கியுள்ள பணத்தை மீட்டால், நம் நாட்டு மக்கள் ஒவ்வொருவர் வங்கி கணக்கிலும் 15 லட்சம் வரவு வைக்க முடியும். அந்த அளவுக்கு பணம் பதுக்கப்பட்டுள்ளது. இதை மீட்டு, நம் நாட்டு வளர்ச்சிக்குப் பயன்படுத்தலாம்' என, கடந்த லோக்சபா தேர்தலின்போது பேசினார்.
இந்த விபரத்தை கனிமொழி அறியவில்லை. இத்தனைக்கும், இவருக்கு டில்லியில் ஏராளமான நட்புகள்; போதாகுறைக்கு, மீடியாவில் வேலை பார்த்தவரும் கூட!
துல்லியமான பேச்சு தான் இவர் வாயிலிருந்து வர வேண்டும்.
'தி.மு.க., ஆட்சிக்கு வந்தால், முதல் கையெழுத்து, தமிழகத்தில் மதுக்கடைகளை மூடுவதற்காக தான் இருக்கும்' எனப் பேசினார்; ஆனால், நடப்பது என்ன... தமிழக மக்கள் அறிவர்.
எனவே, '15 லட்சம் ரூபாய் எங்கே?' என மோடியிடம் நீங்கள் கேட்டால், 'மதுக்கடைகளை மூடப் போவது எப்போது?' என, மக்கள் திருப்பி கேட்பர். விடை இருக்கா?

