இந்தியா தாக்கியதில் ராணுவ தளம் சேதம்: உண்மையை ஒப்புக் கொண்ட பாகிஸ்தான்
இந்தியா தாக்கியதில் ராணுவ தளம் சேதம்: உண்மையை ஒப்புக் கொண்ட பாகிஸ்தான்
ADDED : டிச 29, 2025 03:05 AM

இஸ்லாமாபாத்: இந்தியாவின் 'ஆப்பரேஷன் சிந்துார்' நடவடிக்கையின் போது, 36 மணி நேர இடைவெளிக்குள், 80 ட்ரோன்களை பாகிஸ்தான் எல்லைக்குள் அனுப்பி தாக்குதல் நடத்தியதில், நுார் கான் விமான படைத்தளம் சேதமடைந்ததை பாகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சர் இஷாக் தார் வெளிப்படையாக ஒப்புக்கொண்டார்.
கடந்த ஏப்ரல் மாதம், ஜம்மு - காஷ்மீரின் பஹல்காமில், பாகிஸ்தான் ஆதரவு பயங்கரவாதிகள் நடத்திய துப்பாக்கி சூட்டில், 26 சுற்றுலா பயணியர் உயிரிழந்தனர்.
மறுப்பு
இதையடுத்து, இத்தாக்குதலுக்கு காரணமான பாகிஸ்தான் ஆதரவு பயங்கரவாத அமைப்புகளின் முகாம்கள் மீது, 'ஆப்பரேஷன் சிந்துார்' என்ற பெயரில் நம் படைகள் தாக்குதல் நடத்தின.
பாகிஸ்தானின் விமான படைத்தளங்கள் மீதும் தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் பலத்த சேதம் ஏற்பட்டதால், தாக்குதலை நிறுத்தக் கோரி நம் நாட்டிடம் பாகிஸ்தான் கெஞ்சியது. ஆனால், பல்வேறு சந்தர்ப்பங்களில் நம் நாட்டின் மீது வலுவான தாக்குதலை நடத்தியதாகவும், அதில் இந்தியாவுக்கு பெரும் சேதம் ஏற்பட்டதாகவும் பாகிஸ்தான் கூறி வந்தது. இதற்கு இந்தியா ஆதாரத்துடன் மறுப்பு தெரிவித்து வந்தது.
இந்நிலையில், சமீபத்தில் பாகிஸ்தானில் நடந்த செய்தியாளர் சந்திப்பில், அந்நாட்டு வெளியுறவு அமைச்சர் இஷாக் தார், நம் நாடு நடத்திய ட்ரோன் தாக்குதலில் நுார் கான் விமானப் படைத்தளம் சேதமடைந்ததை வெளிப்படையாக ஒப்புக்கொண்டார். மேலும், நம் நாடு நடத்திய தாக்குதலில் ராணுவ தளத்திற்கு பெரும் சேதம் ஏற்பட்டதையும், வீரர்கள் காயமடைந்ததையும் அவர் ஒப்புக் கொண்டார்.
80 ட்ரோன்கள்
பாகிஸ்தானின் ராவல்பிண்டியில் அமைந்துள்ள விமானப்படைத் தளங்களுள் நுார் கான் விமானப் படைத்தளம் முக்கிய தளமாக கூறப்படுகிறது-. ஆப்பரேஷன் சிந்துார் நடவடிக்கையின் போது குறிவைக்கப்பட்ட 11 விமானப்படை தளங்களுள் இதுவும் ஒன்றாகும்.
மேலும், நம் நாடு குறுகிய நேரத்தில் அதிக எண்ணிக்கையிலான ட்ரோன்களை பாகிஸ்தான் எல்லைக்குள் அனுப்பியதை குறிப்பிட்ட இஷாக் தார், 36 மணி நேரத்துக்குள் 80 ட்ரோன்கள் எல்லையை கடந்து வந்ததாக தெரிவித்துள்ளார்.
ஆனால், 79 ட்ரோன்களை பாகிஸ்தான் படைகள் வழிமறித்ததாகவும், அதில் ஒன்று மட்டும் ராணுவ தளத்தை தாக்கியதாகவும் கூறினார். இதன் வாயிலாக இந்தியா நடத்திய தாக்குதலை வெளிப்படையாக ஒப்புக் கொண்டார்.

