ADDED : ஜன 01, 2024 06:39 AM

நாகை மாவட்டம், வேதாரண்யம், கொள்ளித்தீவை சேர்ந்தவர் கணேசன், 62, கூலி தொழிலாளி. இவரது மகன் செல்வம், 44. கணேசன் வீட்டிற்கு அருகிலேயே குடும்பத்துடன் வசிக்கிறார். எந்த வேலைக்கும் செல்லாமல், குடித்து விட்டு ஊர் சுற்றி வந்ததால், செல்வம் குடும்பத்தினரையும் கணேசனே பராமரித்து வந்தார்.
நேற்று முன்தினம் இரவு போதையில் கணேசன் வீட்டிற்கு சென்ற செல்வம், செலவிற்கு பணம் கேட்டார். கணேசன் தர மறுத்தார். ஆத்திரமடைந்த செல்வம், அங்கிருந்த கட்டையை எடுத்து கணேசன் தலையில் அடித்ததில், அவர் சம்பவ இடத்திலேயே இறந்தார். வேதாரண்யம் போலீசார், செல்வத்தை கைது செய்து விசாரிக்கின்றனர்.
பேக்கரி மீது பெட்ரோல் குண்டு வீச்சு
திருப்பத்துார் மாவட்டம், வாணியம்பாடி பஸ் ஸ்டாண்ட் அருகே, 'கருணா ஸ்வீட்' என்ற பெயரில் பேக்கரி உள்ளது. நேற்று முன்தினம் இரவு, 11:00 மணிக்கு, 'மாஸ்க்' அணிந்து பைக்கில் வந்த மூன்று பேர், மூன்று பெட்ரோல் குண்டுகளை பேக்கரி மீது வீசி தப்பினர்.
இதில், ஒரு குண்டு மட்டும் வெடித்து கடை தீப்பிடித்தது. எரியாத இரு பெட்ரோல் குண்டு களை வாணியம்பாடி போலீசார் மீட்டனர். முன்னதாக தீயை அணைக்க முயன்றதில், பேக்கரி ஊழியர் நந்தகுமார் லேசான காயமடைந்தார். வாணியம்பாடி தீயணைப்பு துறையினர், தீயை கட்டுப் படுத்தி அணைத்தனர். ஆனாலும், பேக்கரியில் இருந்த பொருட்கள் எரிந்து நாசமானது. வாணியம்பாடி டவுன் போலீசார் விசாரிக்கின்றனர்.
கர்ப்பிணி கொலை; கணவன் கைது
நாமக்கல் மாவட்டம், நாமகிரிப்பேட்டை, ஆலமரத்துக்காட்டை சேர்ந்த சிவலிங்கம் மகன் ஹரிஹரன், 23; கனரக வாகன ஓட்டுனர். இவரது மனைவி லட்சுமி, 22, நான்கு மாத கர்ப்பமாக இருந்தார். ஹரிஹரன் கடந்த, 23ல் குடித்து விட்டு வீட்டுக்கு வந்தார். அப்போது கணவன், மனைவி இடையே ஏற்பட்ட தகராறில், சுவரில் லட்சுமி தலையை ஹரிஹரன் மோதியதில் அவர் மயக்கமானார்.
அக்கம்பக்கத்தினர் மீட்டு ராசிபுரம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கிருந்து சேலம் அரசு மருத்துவமனைக்கு துாக்கி சென்றனர். லட்சுமி, 'கோமா' நிலைக்கு சென்றார். ஹரிஹரன், 25ம் தேதி மருத்துவமனையிலேயே கழுத்தை அறுத்து தற்கொலைக்கு முயன்றார். இந்நிலையில், 29ம் தேதி லட்சுமி இறந்தார். ஆயில்பட்டி போலீசார், ஹரிஹரன் மீது கொலை வழக்குப்பதிவு செய்து, நேற்று கைது செய்தனர்.
பட்டியலின வாலிபர் கொலை; இருவர் கைது
துாத்துக்குடி மாவட்டம், ஆதிச்சநல்லுார் அருகே உள்ள புளியங்குளத்தை சேர்ந்தவர் முத்து பெருமாள், 25; தனியார் நிறுவன ஊழியர். நேற்று காலை, 9:00 மணிக்கு திருநெல்வேலி - கன்னியாகுமரி நான்கு வழிச்சாலையில் ரெட்டியார்பட்டி அருகே சென்றபோது, மூன்று பேர் கும்பல் சரமாரியாக வெட்டிக் கொலை செய்தது.
சம்பவத்தில் ஈடுபட்ட கருங்குளம் அருகே காரசேரியை சேர்ந்த முத்து, இசக்கி ஆகிய வாலிபர்களை பெருமாள்புரம் போலீசார் கைது செய்தனர்.
நகை கடையில் திருடிய ஊழியர்கள் கைது
கன்னியாகுமரி மாவட்டம் மார்த்தாண்டம் அருகே பம்மத்தில் உள்ள ஒரு நகைக்கடையில் 12 ஆண்டுகளாக பணிபுரித்து வந்த அனிஷ் 30, என்பவர் உரிமையாளர் வைத்திருந்த நம்பிக்கையை பயன்படுத்தி நகைகளை சிறுகச் சிறுக திருடியுள்ளார்.
திருடிய நகைகளை கணக்கில் தொடர்ந்து வைக்க அங்கு கணக்கு பிரிவில் பணிபுரிந்து வந்த இரண்டு பெண் ஊழியர்கள் உதவி புரிந்தனர். இதனால் சுலபமாக இவர் நகைகளை திருடினார். அனிஷின் போக்கில் மாற்றம் தெரிந்த உரிமையாளர் அவரது நடவடிக்கைகளை தொடர்ந்து கண்காணித்ததில் அவர் நகைகளை எடுத்துச் செல்வதும் திரும்ப வரும்போது நகை கையில் இல்லாததும் கண்காணிப்பு கேமரா காட்சியில் பதிவானதை கண்டுபிடித்தார்.
இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த மார்த்தாண்டம் போலீசார் ஊழியர்களான அனீஸ் மற்றும் பம்மம் பகுதியைச் சேர்ந்த ஷாலினி 21, மார்த்தாண்டத்தைச் சேர்ந்த அபிஷா 21, ஆகியோரை கைது செய்தனர். இவர்களிடமிருந்து 54 பவுன் நகை மற்றும் ஆறு கிலோ வெள்ளிப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது.
இதில் ஷாலினி திருட்டு நகையில் கிடைத்த பணத்தில் தனது காதலனுக்கு விலை உயர்ந்த மற்றும் நவீன பைக் வாங்கி கொடுத்துள்ளார். மூவரும் குழித்துறை நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.
பெண்ணிடம் 10 பவுன் நகை பறிப்பு
தூத்துக்குடி மறவன்மடம் ஆர்.சி.சர்ச் தெருவை சேர்ந்த ஆறுமுகப்பெருமாள் மனைவி முத்துச்செல்வி 46. அங்குள்ள ரேஷன் கடையில் வெள்ள நிவாரண பணம் ரூ .6 ஆயிரத்தை வாங்கிக் கொண்டு வீட்டுக்கு நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது டூவீலரில் வந்த 25 வயது மதிக்கத்தக்க வாலிபர் முத்துச்செல்வி அணிந்திருந்த 10 பவுன் தங்க நகையை பறித்துக் கொண்டு தப்பிச் சென்றார். புதுக்கோட்டை போலீசார் விசாரித்தனர்.
போலீசுக்கு 31 ஆண்டாக டிமிக்கி கொடுத்தவர் கைது
மஹாராஷ்டிரா தலைநகர் மும்பையில், 1989ம் ஆண்டு ராஜு சிக்னா என்பவரை கொன்ற வழக்கில் தீபக் பீஸ் என்பவர் கைது செய்யப்பட்டார். அப்போது அவரிடம் நடத்திய விசாரணையில் தர்மேந்திரா சரோஜ் என்ற நபரையும் கொலை செய்ய முயற்சித்தது தெரியவந்தது.
இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து தீபக் பீஸை கைது செய்து சிறையில் அடைத்தனர். இதற்கிடையே, 1992ம் ஆண்டு ஜாமினில் வெளியே வந்த அவர் தலைமறைவானார். அவரை 31 ஆண்டுகளுக்கு பின், கைது செய்த போலீசார், அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஏவுகணை வீச்சு
நேற்று சிங்கப்பூரிலிருந்து செங்கடல் வழியாக எகிப்து துறைமுகம் நோக்கி சென்ற, டென்மார்க்கிற்கு சொந்தமான சரக்கு கப்பல் மீது, ஹவுதி படை ஏவுகணை தாக்குதல் நடத்தியது. ஏமன் நாட்டில் இருந்து ஏவுகணை மூலம் தாக்குதல் நடத்தப்பட்டது. உடனடியாக சரக்கு கப்பலில் இருந்து ரோந்து பணியிலிருந்த அமெரிக்க போர் கப்பலிடம் உதவி கோரப்பட்டது.
களத்தில் இறங்கிய யு.எஸ்., கிரேவ்லி போர் கப்பல், சரக்கு கப்பலை குறி வைத்து ஏவப்பட்ட அடுத்தடுத்த இரண்டு ஏவுகணைகளை வானிலேயே அழித்தது. இதனால் சரக்கு கப்பல் பெரிய சேதமின்றி தப்பியது. கப்பல் ஊழியர்களும் காயமின்றி உயிர் தப்பினர்.

