ஹிந்து கடவுள் அவமதிப்பு; சத்யராஜ் மீது போலீசில் புகார்
ஹிந்து கடவுள் அவமதிப்பு; சத்யராஜ் மீது போலீசில் புகார்
UPDATED : ஜூலை 09, 2025 12:13 AM
ADDED : ஜூலை 08, 2025 10:48 PM

சென்னை:'ஹிந்து கடவுள்கள் என்பது கற்பனை, மிகைப்படுத்தப்பட்ட மாயை' என, தொடர்ந்து ஹிந்து மதத்தை அவமதித்து வரும், நடிகர் சத்யராஜ் மீது, சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என, போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
சென்னையை சேர்ந்தவர் சதீஷ். பாரத் ஹிந்து முன்னணி அமைப்பின் சென்னை மாவட்ட அமைப்பாளர். இவர், சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளித்தார்.
அதில் கூறியிருப்பதாவது:
கடந்த மாதம், 24ம் தேதி, சென்னை கலைவாணர் அரங்கில், விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் நடத்திய விருது வழங்கும் நிகழ்ச்சியில், நடிகர் சத்யராஜ் பங்கேற்றார்.
அவர் பேசும் போது, 'ஹிந்து கடவுள்கள் கற்பனை, மிகைப்படுத்தப்பட்ட மாயை' என்றெல்லாம் குறிப்பிட்டு உள்ளார். மேலும், நம் நாட்டு முன்னாள் பிரதமர் ராஜிவ் மீது, தற்கொலை படை தாக்குதல் நடத்திய, விடுதலை புலிகள் அமைப்பினரை புகழ்ந்து பேசி உள்ளார்.
புலிகள் அமைப்பின் தலைவராக இருந்த பிரபாகரன் படத்தை திறந்து வைத்தது பெருமையாக இருப்பதாகவும், அந்த வாய்ப்பை வி.சி., தலைவர் திருமாவளவன் ஏற்படுத்தி கொடுத்து உள்ளதாகவும் குறிப்பிட்டு உள்ளார். நடிகர் சத்யராஜ் தொடர்ந்து ஹிந்து கடவுள்களை அவமதித்து வருகிறார். அவர் மீது சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு புகாரில் கூறியுள்ளார்.