UPDATED : ஜூலை 25, 2025 12:40 PM
ADDED : ஜூலை 25, 2025 12:32 PM

பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் ராமதாஸ் பற்றிய வாழ்க்கை ‛அய்யா' என்ற பெயரில் படமாக தயாராகிறது. இப்படத்தை அக்கட்சியின் கவுரவத் தலைவர் ஜிகே மணியின் மகன் ஜிகேஎம் தமிழ்க்குமரன் தயாரிக்கிறார். சேரன் இயக்க, ராமதாஸ் கதாபாத்திரத்தில் ஆரி அர்ஜுனன் நடிக்கிறார்.
சில ஆண்டுகளாகவே ராமதாஸ் வாழ்க்கையை சினிமாவாக்கும் முயற்சியில் சேரன் ஈடுபட்டு இருந்தார். இதற்காக சிலமுறை ராமதாஸை சந்தித்து பேசினார். அவர் வாழ்க்கையில் நடந்த பல சம்பவங்கள், போராட்டங்களை தொகுத்து திரைக்கதையாக மாற்றினார். இந்நிலையில், ராமதாஸ் பிறந்தநாளான இன்று(ஜூலை 25) ‛அய்யா' படத்தின் அறிவிப்பு வெளியாகியுள்ளது. முதலில் இந்த படத்தில் ராமதாஸ் ஆக சரத்குமார் நடிப்பதாக இருந்தது. ஆனால், அவர் முகம், வயது காரணமாகவும், அவரின் அரசியல் பின்புலம் காரணமாகவும் அந்த திட்டம் ரத்தானது. இப்போது ஆரி ஒப்பந்தம் ஆகியுள்ளார்.
“ராமதாஸின் வாழ்க்கை வரலாற்றுப் படமான 'அய்யா'வில் ஒரு பகுதியாக இருப்பதில் மகிழ்ச்சி. இந்த வாய்ப்பிற்காக இயக்குனர் சேரன் சார், மற்றும் தயாரிப்பாளர் தமிழ்க்குமரனுக்கு நன்றி. படத்தில் முதன்மைக் கதாபாத்திரத்தில் நடிக்கிறேன். குரலற்றவர்களுக்காக அவரது குரல் கர்ஜித்தது. இப்போது, அவரது கதையில் பெரிய திரையில் கர்ஜிக்க உள்ளது,” என்று ஆரி அர்ஜுனன் எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.
இப்படம் தொடர்பாக 4 போஸ்டர்களை படக்குழு வெளியிட்டுள்ளது.1987ம் ஆண்டு எம்ஜிஆர் முதல்வராக பதவி வகித்த போது வன்னியர்களுக்கான இட ஒதுக்கீடு போராட்டம் நடைபெற்றது. அதில் நடந்த துப்பாக்கி சூட்டில் 21 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர். அந்த 1987 போராட்டத்தைக் குறிக்கும் வகையிலேயே அந்த நான்கு போஸ்டர்களும் வெளியாகியுள்ளதால் கதையும் அந்த போராட்டத்தை மையமாக வைத்தே இருக்கும் எனக் கூறப்படுகிறது.