பொதுப்பணி துறையில் புதிதாக 'திட்டங்கள் பிரிவு' துவக்கம்
பொதுப்பணி துறையில் புதிதாக 'திட்டங்கள் பிரிவு' துவக்கம்
ADDED : ஆக 25, 2025 02:23 AM

சென்னை: தமிழக பொதுப்பணி துறையில், அரசு உயர்கல்வி நிறுவனங்களில், கட்டுமான பணிகளை மேற்கொண்ட பிரிவு கலைக்கப்பட்டு, 'திட்டங்கள் பிரிவு' புதிதாக உருவாக்கப்பட்டு உள்ளது.
பொதுப்பணி துறை வாயிலாக, பல்வேறு துறைகளின் கட்டுமான பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. உயர்கல்வி துறையின் கீழ் இயங்கும் கல்லுாரிகள் மற்றும் பல்கலைகளில், கட்டுமான பணிகளை கண்காணிக்க, பொதுப்பணி துறையில் தொழில்நுட்ப கல்வி கட்டுமான பிரிவு இயங்கி வந்தது. இதன் தலைமை பொறியாளர் அலுவலகம், கிண்டியில் செயல்பட்டது. தொழில்நுட்ப கல்வி இயக்குநர் கட்டுப்பாட்டில், இப்பிரிவினர் கட்டுமான பணிகளை செய்து வந்தனர்.
தற்போது, பொதுப்பணி துறை நேரடியாக அரசு உயர்கல்வி நிறுவனங்களின் கட்டுமான பணிகளை செய்ய உள்ளது. எனவே, தொழில்நுட்ப கல்வி கட்டுமான பிரிவு முழுமையாக கலைக்கப்பட்டு உள்ளது. அதற்கு மாற்றாக, திட்டங்கள் பிரிவு உருவாக்கப்பட்டு உள்ளது. இதற்கென தலைமை பொறியாளர் பதவியும் ஏற்படுத்தப்பட்டு உள்ளது.
கட்டுமான பணிக்கான டெண்டர்களை இறுதி செய்வதற்கு குழு அமைக்கப்பட்டுள்ளது. குழுவின் தலைவராக பொதுப்பணி துறை முதன்மை தலைமை பொறியாளர் மணிவண்ணன் நியமிக்கப்பட்டு உள்ளார். இவருக்கு கீழ், திட்டங்கள் பிரிவு தலைமை பொறியாளர், இணை தலைமை பொறியாளர், நிதித்துறை பிரதிநிதி ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.
திட்டங்கள் பிரிவு தலைமை பொறியாளர் அலுவலகம், சேப்பாக்கத்தில் செயல்படும் என அறிவிக்கப்பட்டு உள்ளது. இதற்கான அரசாணையை பொதுப்பணி துறை செயலர் மங்கத்ராம் சர்மா பிறப்பித்துள்ளார்.