முதலீடுகளை திசை திருப்புகிறதா மத்திய அரசு?: சில மாநிலங்களில் மட்டும் குவிவதன் பின்னணி
முதலீடுகளை திசை திருப்புகிறதா மத்திய அரசு?: சில மாநிலங்களில் மட்டும் குவிவதன் பின்னணி
ADDED : ஆக 25, 2025 02:05 AM

புதுடில்லி: இந்தியாவில் முதலீடுகளை ஈர்ப்பதில் சில மாநிலங்கள் தொடர்ந்து வெற்றி பெறுவதும், சில மாநிலங்கள் பின்தங்குவதும் ஒரு வழக்கமான விவாதப் பொருளாக உள்ளது. எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்கள், மத்திய அரசின் தலையீடு அல்லது பாரபட்சமான கொள்கைகள் தான் இதற்கு முக்கியக் காரணம் என்று குற்றம்சாட்டுகின்றன. ஆனால், இந்த குற்றச்சாட்டுகள் உண்மையை மறைக்கின்றனவா அல்லது உண்மையிலேயே மத்திய அரசின் தலையீடு இருக்கிறதா என்பதைப் புரிந்துகொள்ள வேண்டியது அவசியம்.
முதலீட்டு கொள்கைகள் முதலீடுகளை ஈர்ப்பதில் ஒரு மாநிலத்தின் சொந்தக் கொள்கைகள் மிக முக்கியமான பங்கை வகிக்கின்றன. உதாரணமாக, குஜராத், மஹாராஷ்டிரா போன்ற மாநிலங்கள் நீண்ட காலமாகவே தொலைநோக்குப் பார்வை கொண்ட தொழில் கொள்கைகளைக் கொண்டு உள்ளன.
இந்த மாநிலங்கள், முதலீட்டாளர்களுக்குத் தேவையான எளிமையான நடைமுறைகள், விரைவான நில ஆர்ஜிதம், மற்றும் ஆதரவான சட்டங்களை வழங்குகின்றன. இதன் விளைவாக, குஜராத் போன்ற மாநிலங்கள் தொடர்ந்து அதிக முதலீடுகளை ஈர்க்கின்றன.
இது மத்திய அரசின் தலையீட்டால் அல்ல; மாறாக மாநில அரசின் சொந்த முயற்சிகளின் விளைவாகும்.
இதற்கு நேர்மாறாக, சில மாநிலங்கள் முதலீடுகளை இழக்கின்றன. மேற்கு வங்கம், கேரளா போன்ற மாநிலங்களில் தெளிவற்ற தொழில்துறைக் கொள்கைகள், சிக்கலான சட்ட நடைமுறைகள், தொழிற்சங்கங்களின் கடுமையான செயல்பாடுகள், மற்றும் நிலம் பெறுவதில் உள்ள சிரமங்கள் முதலீட்டாளர்களைத் தடுக்கின்றன.
மேற்கு வங்கத்தில் டாடா நிறுவனத்தின் சிங்கூர் தொழிற்சாலை வெளியேறியது இதற்கு ஒரு சிறந்த உதாரணம். இதேபோல், கேரளாவில் நில சீர்திருத்தச் சட்டங்கள், இடதுசாரி அரசியல் கொள்கைகள் ஆகியவை, பெரிய நிறுவனங்கள் நுழைவதற்குத் தடையாக உள்ளன.
உத்தரப் பிரதேசத்தில் ஒரு காலத்தில் இருந்த 'குண்டர் ராஜ்ஜியம்' மற்றும் மோசமான கட்டமைப்பு வசதிகள், தொழில் வளர்ச்சிக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தின.
கர்நாடகா போன்ற வலுவான தொழில்துறை அடித்தளத்தைக் கொண்ட மாநிலங்களும் கூட, திடீரென கொள்கைகளை மாற்றியதால், முதலீட்டாளர்கள் மத்தியில் நம்பிக்கையை இழக்கின்றன.
மத்திய அரசின் பங்கு மத்திய அரசு நேரடியாக முதலீடுகளைத் திசை திருப்புகிறது என்ற குற்றச்சாட்டில் அதிக உண்மை இல்லை. மத்திய அரசு முதலீடுகளுக்கு பொதுவான வழிகாட்டுதல்களை மட்டுமே வழங்குகிறது.
ஆனால், ஒரு மாநிலத்தின் தொழில் வளர்ச்சிக்கு மத்திய அரசின் பங்கு என்பது கட்டமைப்பு வசதிகள், நிதி ஒதுக்கீடுகள் போன்ற மறைமுகமான வழிகளில் இருக்கலாம்.
எனினும், ஒரு மாநிலத்தில் முதலீடு செய்யலாமா வேண்டாமா என்பதை முடிவு செய்வது, பெரும்பாலும் முதலீட்டாளர்கள் தான்.
முதலீட்டாளர்கள், ஒரு மாநிலத்தின் ஸ்திரத் தன்மை, சட்டம் - ஒழுங்கு, தொழிலாளர் திறன், மற்றும் அரசால் வழங்கப்படும் சலுகைகள் போன்ற காரணிகளை அடிப்படையாகக் கொண்டே முடிவெடுக்கின்றனர்.
உண்மையான போட்டி முதலீடுகளைப் பெறுவதில், மாநிலங்களுக்கு இடையிலான போட்டி மிகவும் ஆரோக்கியமான ஒன்று. சில மாநிலங்கள் முதலீட்டாளர்களுக்கு சிவப்புக் கம்பளம் விரித்து, விரைவான ஒப்புதல்கள், எளிமையான சட்டங்கள் மற்றும் நல்ல உள்கட்டமைப்பு வசதிகளை வழங்குகின்றன.
மஹாராஷ்டிரா, குஜராத், தமிழ்நாடு, ஹரியானா போன்ற மாநிலங்கள் அன்னிய நேரடி முதலீட்டை ஈர்ப்பதில் முன்னணியில் உள்ளன.
எனவே, குறிப்பிட்ட மாநிலங்களில் மட்டுமே முதலீடுகள் குவிவதற்குக் காரணம், மத்திய அரசின் தலையீட்டை விட, அந்தந்த மாநிலங்களின் சாதகமான அல்லது பாதகமான கொள்கைகள் தான் என்பது தெளிவாகிறது.
முதலீடுகளை இழக்கும் மாநிலங்கள், தங்கள் தோல்விக்கு மத்திய அரசைக் குறை கூறுவது, ஒரு விதத்தில், தங்களது சொந்த பலவீனங்களை மறைக்கும் ஒரு முயற்சியே.
இதை, 'ஆடத் தெரியாதவன் மேடை கோணல் என்றான்' என்ற பழமொழியோடு ஒப்பிடலாம்.
ஏதோ குழாயை திறந்து மூடுவதுபோல மத்திய அரசால் முதலீடுகளை கட்டுப்படுத்த இயலுமா?