மதுரையில் 15 நிமிடத்தில் 45 மி.மீ., மழை; இயல்பு வாழ்க்கை பாதிப்பு!
மதுரையில் 15 நிமிடத்தில் 45 மி.மீ., மழை; இயல்பு வாழ்க்கை பாதிப்பு!
UPDATED : அக் 25, 2024 09:52 PM
ADDED : அக் 25, 2024 07:32 PM

மதுரை: மதுரை நகரில் மதியம் மழை கொட்டித் தீர்த்தது. 15 நிமிடங்களில் 45 மி.மீ., மழை பதிவாகி உள்ளது. உடனடியாக நிவாரண பணிகளை மேற்கொள்ள அதிகாரிகளுக்கு முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டு உள்ளார்.
மதுரை பகுதியில் சில நாட்களாக வடகிழக்குப் பருவமழை தீவிரமடைந்து வருகிறது. காலை நேரத்தில் வெயில் இருந்தாலும் மாலை, இரவு வேளையில் மழை பெய்து வருகிறது. கடந்த வாரம் தல்லாகுளத்தில் அதிகளவாக 13 செ.மீ., மழை பெய்தது.
தொடர்ந்து தினமும் மழை பெய்தாலும், இன்று காலை 8:30 மணி முதல் மாலை 5:30 மணி வரை பலகட்டங்களாக 98 மி.மீ., மழை கொட்டியது. இதில் குறிப்பிடத்தக்க விஷயமாக மதுரை நகரில் மதியம் 3:00 முதல் 3:15 மணிக்குள் 45 மி.மீ., மழை பெய்தது. ரோடெங்கும் மழைநீர் ஆறாக பெருக்கெடுத்து ஓடியது. நான்காவது வார்டு பார்க் டவுன் குடியிருப்பை மழைநீர் சூழ்ந்தது.
ஆலங்குளம் கண்மாயில் உடைப்பு ஏற்பட்டது. இதனால், முல்லை நகர் உள்ளிட்ட பகுதிகளில் தண்ணீர் சூழ்ந்துள்ளன.
கனமழை காரணமாக சர்வேயர் காலனி, ஒத்தக்கடை காந்தி நகர் பகுதியிலும் வெள்ளநீர் வீடுகளை சூழ்ந்து காணப்படுகிறது.
நகரெங்கும் வாகன போக்குவரத்து பாதிக்கப்பட்டது. 70 ஆண்டுகளுக்கு பிறகு அதி கனமழை பதிவாகி உள்ளது.
ராஜகம்பீரம், கொடிக்குளம் கண்மாய்களுக்கு செல்லும் கால்வாய்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு உள்ளது.இதன் காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டு உள்ளது.
முதல்வர் உத்தரவு
மதுரையில் சீரமைப்பு மற்றும் நிவாரண பணிகளை துரிதப்படுத்த முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டு உள்ளார்.
இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது: மதுரையில் கனமழை பெய்ததையொட்டி முதல்வர் ஸ்டாலின், கலெக்டர் சங்கீதாவை தொலைபேசியில் தொடர்பு கொண்டு மீட்பு மற்றும் நிவாரண பணிகள் குறித்து கேட்டறிந்தார். பாதிக்கப்பட்டு உள்ள மக்களுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் துரிதமாக மேற்கொள்ளவும், களத்திற்கு சென்று சீரமைப்பு பணிகளை மேற்கொள்ளவும் அமைச்சர்கள் மூர்த்தி, தியாகராஜன் மற்றும் சங்கீதாவிற்கு முதல்வர் உத்தரவிட்டுள்ளார். இவ்வாறு அந்த அறிக்கையில் தமிழக அரசு கூறியுள்ளது.

