குன்றம் தீபத்துாண் விவகாரம் மக்கள் மனதில் கொழுந்துவிட்டு எரிகிறது: நயினார் நாகேந்திரன்
குன்றம் தீபத்துாண் விவகாரம் மக்கள் மனதில் கொழுந்துவிட்டு எரிகிறது: நயினார் நாகேந்திரன்
UPDATED : டிச 28, 2025 06:37 AM
ADDED : டிச 28, 2025 06:26 AM

அவனியாபுரம்: 'திருப்பரங்குன்றம் தீபத்துாணில் தீபம் ஏற்ற தடை விதிக்கப்பட்டது, மக்கள் மனதில் கொழுந்து விட்டு எரிய ஆரம்பித்துள்ளது' என பா.ஜ., மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்தார்.
மதுரையில் அவர் கூறியதாவது: இடைநிலை ஆசிரியர்கள் தொடர்ந்து போராட்டம் நடத்துகிறார்கள். தேர்தல் நேரத்தில் கொடுத்த உத்தரவாதத்தை ஐந்தாண்டுகளாகியும்கூட நிறைவேற்ற தி.மு.க.,வுக்கு மனமில்லை. ஜாக்டோ ஜியோ ஜன.,6 முதல் போராட்டம் நடத்த இருக்கிறார்கள். சத்துணவு ஊழியர்களும் சேர்ந்து போராட உள்ளனர். போராட்ட அரசாக இருக்கிறது. இதற்கெல்லாம் முடிவு தேர்தலில் வரும்.
தைப்பொங்கல் முடிந்த பின்பு கூட்டணி குறித்து சொல்ல முடியும். தற்போது இருக்கும் கூட்டணியே மிகப்பெரிய வெற்றி பெறும். இன்னும் பல கட்சிகள் வந்தால் இன்னும் பலமான கூட்டணியாக அமையும். குஜராத்தை தொடர்ந்து தற்போது காசி தமிழ்ச்சங்கமத்தை பிரதமர் மோடி நடத்துகிறார். அதற்கு சிறப்பு ரயில், தனி பஸ்கள் அனுப்பப்பட்டுள்ளன. காசி தமிழ்ச் சங்கமம் வெறும் மாநாடு மட்டுமல்ல.
அவர்கள் தென்காசியில் இருந்து புறப்பட்டு தஞ்சாவூர், புதுச்சேரி, ஐதராபாத் என தமிழ் நாகரிகம், பண்பாடு, கலாசாரம் உள்ள இடங்களை பார்த்துவிட்டு இறுதியாக காசி தமிழ்ச் சங்கமத்திற்கு செல்கிறார்கள். நிறைவு விழா ராமேஸ்வரத்தில் நடக்கிறது. இவ்வாறு தமிழுக்கு பெருமை சேர்த்துக் கொண்டிருக்கும் பிரதமரை, முதல்வர் தொடர்ந்து விமர்சிக்கிறார்.
பா.ஜ., வுடன் வந்தால்தான் விஜய்க்கு பாதுகாப்பு என தமிழிசையின் கருத்து நல்ல கருத்து. கரூரிலும் அவருக்கு பாதுகாப்பு கொடுக்கப்படவில்லை. அதைத்தான் அவர் கூறி இருக்கிறார். திருப்பரங்குன்றம் தீபத்துாணில் தீபம் ஏற்றும் விவகாரத்தில் முதல்வர் ஸ்டாலின் செய்தது மிகப்பெரிய தவறு.
நீதிமன்ற தீர்ப்பை மதிக்காமல், நீதிபதிகள் மீது 'இம்பீச்மென்ட்' கொண்டு வந்தது மோசமான முன்னுதாரணம்.
திருப்பரங்குன்றம் தீப பிரச்னை ஒவ்வொரு மக்கள் மனதிலும் கொழுந்து விட்டு எரிய ஆரம்பித்துள்ளது. திருப்பரங்குன்றத்தின் புனிதம் கெடக்கூடாது என்பதற்காக பூர்ணசந்திரன் தீக்குளித்தார். எவரும் இதுபோன்ற காரியத்தை செய்யக்கூடாது.
அதே சமயம் தீபம் ஏற்ற வேண்டும் என்று எண்ணம் ஒவ்வொருவரின் மனதிலும் உள்ளது. அதனடிப்படையில் அங்குள்ள பெண்கள் தீபம் ஏற்ற வேண்டும் என்று உறுதியாக இருக்கிறார்கள். வெளியூரிலிருந்து வருபவர்கள் சிக்கந்தர் மலை என்று சொல்வதும், பிரியாணி எடுத்து வருவதும் தி.மு.க.,வினரால் பரப்பி விடப்பட்ட செயல். ஓட்டு வங்கிக்காக இப்படி நடக்கிறது என்றார்.

