சாம்பார் இன்றி வெறும் இட்லி; அம்மா உணவகத்தில் அதிர்ச்சி
சாம்பார் இன்றி வெறும் இட்லி; அம்மா உணவகத்தில் அதிர்ச்சி
ADDED : ஆக 30, 2025 01:27 AM

பந்தலுார்; பந்தலுார் அம்மா உணவகத்தில் சாம்பார் இன்றி வெறும் இட்லி வழங்கியதால், அதிருப்தியடைந்த தொழிலாளர்கள் அதை வாங்காமல் பசியுடன் சென்றனர்.
நீலகிரி மாவட்டம், பந்தலுாரில் உள்ள அம்மா உணவகத்தை நெல்லியாளம் நகராட்சி பராமரிக்கிறது. இங்கு குறைந்தளவில் காய்கறிகள் வாங்கி கொடுப்பதால் சாம்பார் மற்றும் ரசம் தரம் இல்லாமல் வழங்கப்பட்டு வந்தது. இந்நிலையில், சில நாட்களுக்கு முன் அரிசி இல்லை எனக் கூறி, இட்லி தயாரிக்க முடியாத நிலை உருவானது. நேற்று காலை, சாம்பாருக்கான காய்கறிகள் வாங்கி தராததால், வெறும் இட்லி மற்றும் சாப்பாடு வழங்கப்பட்டது. இதனால் அதிருப்தியடைந்த மக்கள் உணவை வாங்கி அப்படியே வைத்து விட்டு சென்றனர் .
தொழிலாளர்கள் கூறுகையில், 'காலை நேரத்தில் அம்மா உணவகத்தில் உணவு உட்கொண்டு பணிக்கு செல்ல வந்தோம். தற்போது, பட்டினியுடன் செல்லும் நிலை ஏற்பட்டது' என்றனர்.