அனைவரும் ஒன்றிணைவது காலத்தின் கட்டாயம்: அ.தி.மு.க.,வினருக்கு சசிகலா அழைப்பு
அனைவரும் ஒன்றிணைவது காலத்தின் கட்டாயம்: அ.தி.மு.க.,வினருக்கு சசிகலா அழைப்பு
UPDATED : ஆக 31, 2025 08:03 PM
ADDED : ஆக 31, 2025 08:34 AM

சென்னை: 'அ.தி.மு.க.,வில் இருந்து விலக்கப்பட்டோர், விலகி இருப்போர் என, அனைவரும் கரம் கோர்த்து ஒன்றிணைந்து, நம் எதிரியை வென்றாக வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம்' என, மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் தோழி சசிகலா தெரிவித்துள்ளார்.
அவர் வெளியிட்ட அறிக்கை:
அ.தி.மு.க.,வின் இரு பெரும் தலைவர்களான எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா இல்லாத நிலையில், கட்சி பெரும் சோதனைக்குள்ளாகி உள்ளது. அவர்கள் வழியில் நடைபோடும் நம்மில் சிலர் பிரிந்து கிடக்கிறோம். கட்சியில் இருந்து விலக்கப்பட்டோர், விலகி இருப்போர் என, அனைவரும் கரம் கோர்த்து, ஒன்றிணைந்து, நம் எதிரியை வென்றாக வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம்.
முக்கிய தருணம்
மனமாச்சர்யங்களை மறந்து, கருத்து வேறுபாடுகளை கடந்து, கட்சி முக்கியம்; கட்சியின் வெற்றி முக்கியம் என்பதை உணர்ந்து, நாம் செயல்பட வேண்டிய முக்கிய தருணம் இது.
தி.மு.க.,வை ஆட்சி அதிகாரத்தில் இருந்தும், அரசியல் களத்தில்இருந்தும், அப்புறப்படுத்த வேண்டும் என, எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா பாடுபட்டனர். அந்த தி.மு.க., மீண்டும் வென்று, ஆட்சி அமைக்கும் சூழலை, நாம் உருவாக்கி விடக்கடாது.
அதனால்தான் கட்சி ஒன்றுபட குரல் கொடுக்கிறேன். எனக்கு எந்த சுயநலமும் கிடையாது. கட்சியினர் யார் மீதும் எனக்கு வருத்தமோ, கோபமோ இல்லை. அனைவருடனும் ஒன்றிணைந்து கட்சிப் பணியாற்றவே விரும்புகிறேன். கட்சி நலன், தமிழக மக்கள் நலன் கருதி, ஒவ்வொரு முடிவையும் எடுத்து வருகிறேன்.
கடந்த 2021 சட்டசபை தேர்தலின்போது, அ.தி.மு.க.,வின் வெற்றிக்கு என்னால் எவ்வித இடையூறும் ஏற்பட்டு விடக்கூடாது என எண்ணி, தேர்தல் களத்தில் அமைதி காத்தேன். ஆனால், கட்சி வெற்றி பெறவில்லை.
அதன்பின் நடந்த எந்த தேர்தலிலும், கட்சி வெற்றி பெற முடியாமல் இருப்பது, மிகவும் வேதனை அளிக்கிறது. இனியும் வேடிக்கை பார்ப்பது, மறைந்த நம் தலைவர் களுக்கு செய்யும் துரோகம்.எனவே, நடந்தவை நடந்தவையாக இருக்கட்டும், இனி நடப்பவை நல்லவையாக இருக்கட்டும்
என்ற மனதுடன், நாம் அனைவரும் ஒன்றிணைவதுதான், தமிழக மக்களுக்கு நாம் செய்கிற மிகப்பெரிய உதவி.
வெற்றிக்கான பாதை தனி ஆவர்த்தனம் செய்வதால், வெற்றி என்ற இலக்கை அடைவது மிக கடினம். இதை உணர்ந்தால் தான், ஆட்சிக்கட்டிலில் அ.தி.மு.க., அமரும். ஒன்றுபட்ட அ.தி.மு.க.,வையே, தமிழக மக்களும், தொண்டர்களும் விரும்புகின்றனர். கூட்டணி கட்சியினரும் இதையே விரும்புகின்றனர். எனவே, கட்சி முன்னோடிகள், தொண்டர்கள் ஒவ்வொருவரும் சிந்தியுங்கள். வெற்றிக்கான பாதையில் பயணித்திடுவோம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.