துரோகிகள் இருக்கும் வரை ராமதாசுடன் சேர மாட்டேன்: அன்புமணி
துரோகிகள் இருக்கும் வரை ராமதாசுடன் சேர மாட்டேன்: அன்புமணி
ADDED : நவ 05, 2025 07:10 AM

பென்னாகரம்: ''துரோகிகள் இருக்கும் வரை, ராமதாஸ் உடன் சேர மாட்டேன்,'' என, பா.ம.க., தலைவர் அன்புமணி தெரிவித்தார்.
தர்மபுரி மாவட்டம், பென்னாகரத்தில் நடந்த உரிமை மீட்பு பயண பொதுக்கூட்டத்தில் அவர் பேசியதாவது:
கடந்த 2010ல் பென்னாகரம் இடைத்தேர்தலில், மூன்று மாதங்கள் தங்கி பிரசாரம் செய்தேன். அப்போதுதான் நான் அரசியல் கற்றுக் கொண்டேன். கடந்த 2014 லோக்சபா தேர்தலில், பென்னாகரம் உள்ளடங்கிய, தர்மபுரி தொகுதியில் வெற்றி பெற்றேன்.
கடந்த 2016 சட்டசபை தேர்தலில், பென்னாகரத்தில் தோல்வி அடைந்தேன். இந்த வெற்றியும், தோல்வியும் எனக்கு பல பாடங்களை கற்று தந்தன.
இங்கு பேசிய பலரும், ஜி.கே.மணி குறித்து பேசினர். அந்த வரலாறு முடிந்து விட்டது. வரும் சட்டசபை தேர்தலில், விவசாயிகளுக்கு, பெண்களுக்கு எதிரான தி.மு.க., தோற்க வேண்டும். அதற்காக, 100 நாள் பயணம் மேற்கொண்டு வருகிறேன்.
பா.ம.க., நிறுவனர் ராமதாசை சுற்றி துரோகிகள், தீய சக்திகள், தி.மு.க.,வின் கைக்கூலிகள் இருக்கும் வரை, அவருடன் இணைய மாட்டேன், ராமதாஸ் சமூக சீர்திருத்தவாதி. கடந்த 45 ஆண்டுகளுக்கும் மேலாக, தமிழக மக்களுக்காக உழைத்து வருபவர். ஆனால், இன்று அவர் மனதை மாற்றி, என்னை பிரித்துள்ளனர்.
துரோகிகள் இருக்கும் வரை அங்கே சேர மாட்டேன். பா.ம.க., நிர்வாகிகளை, இனி யாராவது மிரட்டினால், சும்மா இருக்க மாட்டேன். தொலைத்து விடுவேன்; தொகுதிக்குள்ளேயே வர விட மாட்டோம்.
இவ்வாறு அவர் பேசினார்.

