ஹைட்ரோகார்பன் திட்டம்: அமெரிக்காவிடம் முட்டி மோதுகிறது மத்திய அரசு; அனுமதிக்க மாட்டோம் என்கிறது மாநில அரசு!
ஹைட்ரோகார்பன் திட்டம்: அமெரிக்காவிடம் முட்டி மோதுகிறது மத்திய அரசு; அனுமதிக்க மாட்டோம் என்கிறது மாநில அரசு!
ADDED : ஆக 24, 2025 07:38 PM

சென்னை:பெட்ரோலியம் இறக்குமதி விவகாரத்தில், அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகளுடன் மத்திய அரசு போராடிக் கொண்டிருக்கும் நிலையில், 'தமிழகத்தில் எந்த பகுதியிலும் ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு அனுமதி தர மாட்டோம்' என்று மாநில அரசு அறிவித்துள்ளது.
அது என்ன ஹைட்ரோ கார்பன்!
ஹைட்ரோ கார்பன் என்பது கச்சா எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு போன்ற வளங்களை தேடி ஆய்வு செய்து பிரித்தெடுக்கும் திட்டங்களை குறிப்பதாகும். பெட்ரோலியம், நிலக்கரி, இயற்கை எரிவாயு போன்ற எரிபொருட்களின் முக்கியப் பகுதி ஹைட்ரோ கார்பன். பெட்ரோலியம், இயற்கை எரிவாயு போன்றவை இந்திய மக்களுக்கு தேவையான அளவு இங்கே உற்பத்தி செய்யப்படுவதில்லை. அதாவது கண்டறியப்படவில்லை.
அதனால் வெளிநாடுகளில் இருந்து பெருமளவு அந்நியச் செலாவணி கொடுத்து இந்தியா அவற்றை இறக்குமதி செய்கிறது. விலை குறைவாகக் கிடைக்கிறது என்பதற்காக ரஷ்யா போன்ற தொலைதுார நாடுகளில் இருந்தும் அவற்றை இந்தியா இறக்குமதி செய்கிறது.
இதற்கு இடையூறு செய்யும் வகையில், அமெரிக்க அதிபர் டிரம்ப் வரி விதிப்பு, அபராத வரி விதிப்பு செய்து வருகிறார். இத்தகைய சூழ்நிலையில், உள்நாட்டிலேயே நமக்குத் தேவையான பெட்ரோலியம், இயற்கை எரிவாயு வளங்களை கண்டறியும் முயற்சியில் மத்திய அரசு ஈடுபட்டுள்ளது.
அதன் ஒரு பகுதியாக தமிழகத்தில் 20 இடங்களில் எண்ணெய்க்கிணறு தோண்ட திட்டமிட்டு முறைப்படி அனுமதியும் பெற்றுள்ளது. இத்தகைய சூழ்நிலையில் தான், தமிழக அரசு எதிர்ப்பு தெரிவித்தும், அனுமதி தர மாட்டோம் என்றும் அறிக்கை வெளியிட்டுள்ளது.
தமிழக அமைச்சர் தங்கம் தென்னரசு வெளியிட்டுள்ள அறிக்கை:
தமிழக அரசு கடந்த 20.02.2020 அன்று தமிழ்நாடு பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டல சட்டம், 2020ஐ இயற்றியதன் மூலம் காவிரி டெல்டா பகுதியினை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவித்தது.
இச்சட்டத்தின் அடிப்படையில் தஞ்சாவூர், திருவாரூர் மற்றும் நாகப்பட்டினம் புதுக்கோட்டை மற்றும் கடலூர் மாவட்டத்தின் குறிப்பிட்ட பகுதிகள் ஆகிய டெல்டா பகுதிகளில் புதிதாக எரிபொருள், இயற்கை வாயு, நிலக்கரி மீத்தேன் மற்றும் ஷெல் வாயு போன்றவற்றின் இருப்பு குறித்த ஆராய்ச்சி மற்றும் அகழ்வுத் தொழில்கள் ஆகியவறை மேற்கொள்ள தடை விதிக்கப்பட்டது. மேலும் கடந்த 2023ம் ஆண்டு இத்தடை மயிலாடுதுறை மாவட்டத்துக்கும் விரிவுபடுத்தப்பட்டது.
இதற்கிடையில், ONGC நிறுவனமானது ராமநாதபுரம் மாவட்டத்தில் ஹைட்ரோகார்பன் இருப்பு குறித்து ஆய்வு செய்ய விண்ணப்பித்து இருந்ததைத் தொடர்ந்து மாநில சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு ஆணையம், சுற்றுச்சூழல் அனுமதியை நேரடியாக வழங்கியுள்ளது. இந்த செய்தி தமிழ்நாடு அரசின் கவனத்திற்கு வந்துள்ளது.
இதை அடுத்து ONGC நிறுவனத்திற்கு வழங்கப்பட்ட அனுமதியை உடனே திரும்ப பெறுமாறு மாநில சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு ஆணையத்திற்கு தமிழ்நாடு அரசு அறிவுறுத்தி உள்ளது.
விவசாயிகள், பொதுமக்கள் நலன் கருதி, தமிழ்நாட்டின் எந்த ஒரு பகுதியிலும், ஹைட்ரோகார்பன் தொடர்பான எந்த ஒரு திட்டத்தையும் அனுமதிக்க முடியாது என்பதே தமிழக முதல்வர் ஸ்டாலின் திடமான கொள்கை முடிவாகும்.
தற்போது மட்டுமின்றி எதிர்காலத்திற்கும் நம் மாநிலத்தின் எந்த ஒரு பகுதியிலும் இத்திட்டங்களை செயல்படுத்த தமிழக அரசு ஒருபோதும் அனுமதிக்காது.
இவ்வாறு அதில் அமைச்சர் தங்கம் தென்னரசு கூறி உள்ளார்.