தமிழக முதல்வர் வருகையால் பீஹாரில் என்ன மாற்றம் வந்து விடும்: பிரசாந்த் கிஷோர் கேள்வி
தமிழக முதல்வர் வருகையால் பீஹாரில் என்ன மாற்றம் வந்து விடும்: பிரசாந்த் கிஷோர் கேள்வி
ADDED : ஆக 24, 2025 08:05 PM

சிவான்: தமிழக முதல்வர் ஸ்டாலின் வருகையால் பீஹாரில் என்ன மாற்றம் வந்துவிட போகிறது என்று பிரசாந்த் கிஷோர் கேள்வி எழுப்பி உள்ளார்.
இவ்வருட இறுதியில் சட்டசபை தேர்தலை எதிர்கொள்ளும் பீஹாரில் வாக்காளர் ஓட்டுரிமையை உறுதி செய்ய வலியுறுத்தி காங்கிரஸ் எம்பியும், லோக்சபா எதிர்க்கட்சி தலைவருமான ராகுல் யாத்திரையை துவங்கி இருக்கிறார். இந்த யாத்திரைக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில், ஆக.27ம் தேதி முதல்வர் ஸ்டாலின் கலந்து கொள்கிறார். இதற்காக அவர் பீஹார் செல்ல உள்ளார்.
இந்நிலையில் ஜன் சுராஜ் கட்சியின் நிறுவனரும், பிரபல தேர்தல் உத்தி வகுப்பாளருமான பிரசாந்த் கிஷோர் கூறி உள்ளதாவது;
தமிழக முதல்வர் ஒரு வேளை பீஹார் வருகிறார் என்றால் அதனால் என்ன மாற்றம் இங்கு (பீஹார்) நிகழ்ந்துவிட போகிறது? அவரின் வருகையால் பீஹார் முன்னேறிவிடுமா?
பீஹாரின் பிரச்னைகளுக்கு, பீஹாரிலேயே தான் தீர்வு காணப்பட வேண்டும். தமிழக முதல்வர் ஸ்டாலின் இங்கு வருவதாக இருந்தாலும் சரி அல்லது கர்நாடகா முதல்வர் வருவதாக இருந்தாலும் சரி, அது எவ்வித மாற்றத்தையும் ஏற்படுத்தாது.
பீஹாருக்கு வேலையில்லா திண்டாட்டத்தை ஒழிக்க வேண்டும் என்ற ஒரு யாத்திரை தான் தற்போது வேண்டும். பிரயோஜனம் இல்லாத மற்ற யாத்திரையால் (ராகுல் யாத்திரையை குறிப்பிடுகிறார்) என்ன ஆதாயம் கிடைத்துவிட போகிறது?
காங்கிரசை குற்றம் சுமத்துகிறார் பிரதமர் மோடி. காங்கிரஸ் பிரதமர் மோடியை குற்றம் சுமத்துகிறது. ஆனால் பீஹார் இளைஞர்கள் கேட்பது எல்லாம், இங்கு வேலைவாய்ப்புகள் எப்போது கிடைக்கும், புலம் பெயர்ந்து செல்வோரை எப்போது தடுப்பீர்கள் என்பதுதான்.
இவ்வாறு பிரசாந்த் கிஷோர் கூறினார்.
பிரபல தேர்தல் உத்தி வகுப்பாளரான பிரசாந்த் கிஷோர், பாஜ, திரிணமுல் காங்கிரஸ் உள்ளிட்ட பல கட்சிகளுக்கு தேர்தல் காலங்களில் வியூகங்களை வகுத்துக் கொடுத்தவர். தமிழக சட்டசபை தேர்தலில் திமுகவுக்கு தேர்தல் உத்திகளை வடிவமைத்தவர்.