ரூ.200 கோடி செலவு கணக்கு எப்படி? தோட்டக்கலைத்துறை இயக்குநர் விளக்கம்
ரூ.200 கோடி செலவு கணக்கு எப்படி? தோட்டக்கலைத்துறை இயக்குநர் விளக்கம்
ADDED : நவ 27, 2025 05:32 AM

சென்னை: 'தோட்டக்கலை பண்ணை மற்றும் பூங்காக்கள் வழியே கிடைத்த, 200 கோடி ரூபாய், ஆட்சி மன்ற குழு அனுமதி பெற்று செலவு செய்யப்பட்டது' என, தோட்டக்கலைத் துறை இயக்குநர் குமாரவேல் பாண்டியன் தெரிவித்துள்ளார்.
பண்ணை, பூங்காக்கள் வழியே கிடைத்த 200 கோடி ரூபாயை, தோட்டக்கலைத் துறை காலி செய்தது, சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது என, கடந்த 22ம் தேதி நம் நாளிதழில் செய்தி வெளியிடப்பட்டது.
அதேபோல், தேசிய வேளாண் வளர்ச்சி திட்டத்தின் கீழ் செயல்படுத்தப்படும் திட்டங்களில், 75 கோடி ரூபாய்க்கு முறைகேடு நடந்திருப்பது குறித்து, கடந்த 25ம் தேதி செய்தி வெளியானது.
இது தொடர்பாக, தோட்டக்கலைத் துறை இயக்குநர் குமாரவேல் பாண்டியன் அளித்துள்ள விளக்கம்:
'பண்ணை, பூங்காக்களால் கிடைத்த, 200 கோடி ரூபாயை, தோட்டக்கலைத் துறை காலி செய்ததால் சர்ச்சை' என செய்தி வந்துள்ளது.
கடந்த 2021 முதல் நடப்பாண்டு வரை, 140 கோடி நடவு செடிகள் உற்பத்தி செய்யப்பட்டு, நியாயமான விலையில் வழங்கப்பட்டுள்ளன. இதற்கான உற்பத்தி செலவு, பணியாளர் ஊதியம் ஆகியவை, பண்ணை நிதியில் இருந்தே செலவு செய்யப்படுகிறது.
பண்ணை மற்றும் பூங்காக்களை மேம்படுத்தி, உட்கட்டமைப்புகளை உருவாக்கவும் பண்ணை நிதி உபயோகப்படுத்தப்படுகிறது. ஆட்சி மன்ற குழு அனுமதி பெற்று செலவு செய்யப்படுகிறது. செலவு தொடர்பாக, அரசிடம் இருந்து, எந்தவித நிதியும் பெறப்படுவதில்லை. கடந்த ஐந்து ஆண்டுகளில் பண்ணை வரவு நிதி கணிசமாக அதிகரித்துள்ளது.
தேசிய தோட்டக்கலை இயக்க திட்டம் மற்றும் நுண்ணீர்பாசன திட்டத்தில், 75 கோடி ரூபாய் முறைகேடு நடந்துள்ளதாக, செய்தி வெளியாகி உள்ளது.
இந்த இரண்டு திட்டங்களுக்கும், நிர்வாக செலவுக்கு ஒதுக்கப்பட்ட மொத்த நிதியில் 90 சதவீதம், அனைத்து மாவட்டங்களுக்கும் பகிர்ந்தளிக்கப்பட்டு உள்ளது.
தோட்டக்கலை இயக்குநர் மற்றும் உயர் அதிகாரிகள், தமிழகம் முழுதும் பயணம் செய்வதற்கு, ஒரு வாகனம் மட்டுமே, மாத வாடகைக்கு அமர்த்தப்பட்டு உள்ளது.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

