ஜி.எஸ்.டி., வரி சீர்திருத்தம்; ஜி.டி.பி., அதிகரிக்கும்! ஆடிட்டர் கார்த்திகேயன் கருத்து
ஜி.எஸ்.டி., வரி சீர்திருத்தம்; ஜி.டி.பி., அதிகரிக்கும்! ஆடிட்டர் கார்த்திகேயன் கருத்து
ADDED : செப் 07, 2025 06:51 AM

கோவை 'ஜி.எஸ்.டி., வரி குறைப்பால், மக்களின் செலவிடும் திறனும் நுகர்வும் அதிகரித்து, ஜி.டி.பி.,யில் எதிரொலிக்கும்' என, ஆடிட்டர் கார்த்திகேயன் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக, அவர் மேலும் கூறியதாவது:
ஜி.எஸ்.டி.,யில் இதுவரை இருந்த நடைமுறை சிக்கல்கள் களையப்பட்டுள்ளன. சராசரி மனிதர்கள் பயன்படுத்தும் பல்வேறு நுகர்பொருட்கள் மீதான வரி குறைக்கப்பட்டுள்ளது. இது, நுகர்வை அதிகரிக்கும்; மக்களின் வாழ்க்கை தரம் உயர்ந்து, பொருளாதாரம் வளர்ச்சி பெறும்.
இந்த வரி சீர்திருத்தத்தால், அரசுக்கு ரூ.48 ஆயிரம் கோடி உடனடி வருவாய் இழப்பு ஏற்படும். எனினும், பொருட்களின் விலை குறையும்போது, மக்கள் தங்களிடம் உபரியாகும் பணத்தை, சேமிப்பு அல்லது செலவு செய்வார்கள். நுகர்வு அதிகரித்து கூடுதலாக பொருட்கள் வாங்குவர். உற்பத்தியும் உயரும். இவற்றுக்கான ஜி.எஸ்.டி.,யால், அரசு தனது வருவாய் இழப்பை மீட்டுக் கொள்ளும். அடுத்த 2 ஆண்டுகளில் ஜி.டி.பி., 0.5 சதவீதம் அதிகரிக்கும் என கணிக்கப்பட்டுள்ளது; மாநில அரசுகளும் பயன்பெறும்.
ஏற்றுமதிக்கு உத்வேகம் காப்பீடு துறையிலும் விலை குறைப்பு உள்ளது. இன்வர்டட்ட் டியூட்டி ஸ்ட்ரக்சர் பிரச்னைகளில் கவனம் செலுத்தப்பட்டுள்ளது. அமெரிக்க வரிவிதிப்பால் ஏற்றுமதி துறையில் சுணக்கம் ஏற்பட்டுள்ள சூழலில் வரிகுறைப்பு உத்வேகத்தை அளித்துள்ளது. சிப்பமிடல் (பேக்கேஜிங்) பொருட்களுக்கான வரி குறைப்பால், ஏற்றுமதி பொருட்களை சிப்பமிடும் செலவு குறையும். இது, ஏற்றுமதி துறைக்கு ஊக்கமளிக்கும். பசுமை எரிசக்தி மீதான செலவுகள் குறையும்.
உளவியல் தடை தகர்ந்தது பற்பசை, பிரஷ், ஷாம்பூ போன்ற மக்களின் அன்றாட நுகர்வுப் பொருள்கள், அத்தியாவசிய பொருட்கள், சேவைகள் மீதான வரி குறைப்பு, விலையை குறைக்கும். இது, மக்களுக்கு நம்பிக்கையை ஏற்படுத்தும்.
சில பொருட்கள் மீதே 28 சதவீத வரி என்றிருந்தபோதும், ஜி.எஸ்.டி., என்றாலே கூடுதல் வரி என்ற உளவியல் தடை இருந்தது. இந்த வரி சீர்திருத்தம், அந்த தடையில் இருந்து மக்களை வெளிக்கொண்டு வந்துள்ளது. வரி செலுத்துதல் நாட்டின் வளர்ச்சிக்கானது என ஏற்றுக்கொள்ளும் மனப்பாங்கை உருவாக்கும்.
எளிமையாகும் வர்த்தகம் வரி குறைப்பு தவிர, ஜி.எஸ்.டி., அலுவலர்களின் செயல்முறைகளிலும் மாற்றம் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அடிக்கடி நோட்டீஸ் என்பதை, தொழில், வர்த்தக துறையினர் விரும்புவதில்லை. 'ஆட்டோ பாப்புலேட்டட் ரிட்டன்' நடைமுறையால், தவறுகள் பெரிதாக இருக்காது. ரீபண்ட் பெறுவதில் சுணக்கம் இருக்காது.
வியாபாரிகள், தொழில்முனைவோர் வரி நடைமுறைகளில் அதிக நேரத்தைச் செலவிடாமல், உற்பத்தியில் தங்களின் முழு கவனத்தையும் செலுத்த வாய்ப்பாக இருக்கும்.
எனவே, அதிகாரிகளுக்கு அரசு உரிய அறிவுறுத்தல் வழங்கும் என எதிர்பார்க்கலாம். ஜி..எஸ்.டி., சீர்திருத்த அறிவிப்புகள் நமது பொருளாதார வளர்ச்சிக்கு உறுதுணையாக இருக்கும். இந்தியா வல்லரசாவதற்கான வாய்ப்பு அதிகரித்துள்ளது.
இவ்வாறு, தெரிவித்தார்.